புதன், மே 31

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர்

1.மூலவர் : சனீஸ்வரன்
2.சிறப்பு : சுயம்பு
3.தல மரம் : விடத்தை
4.தலபுஷ்பம் : கருங்குவளை
5.தலஇலை : வன்னி இலை
6.வாகனம் : காகம்
7.தானியம் : எள்
8.ஊர் : குச்சனூர்
9.புராணப்பெயர் : செண்பகநல்லூர்
10.மாவட்டம் : தேனி

பிரார்த்தனை

சனி தோசம் உள்ளவர்கள் இங்கு மனமுருக வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சோதனைகள் விலகி சுபிட்சம் கிடைக்கிறது. மேலும் புதிய தொழில் தொடங்க, வியாபார விருத்தி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்தி கடன்

பகவானுக்கு எள்விளக்கு போடுதல், காக்கைக்கு அன்னமிடல் ஆகியவற்றை செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

கோயிலின் சிறப்பம்சம்

*கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனுõரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் தான்

தல பெருமைகள் :

* சனிபகவானுக்கு பிரம்மகதி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம்.

* சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம்.

* அரூபி வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகி றது.இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது.

* சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.

*தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் சனி பகவான் கோயி லுக்கு வந்து செல்கின்றனர்.

தல வரலாறு :

தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான்.அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது.அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரோடு வளர்ந்தான்.அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான்.புத்திசாலியான வளரப்பு மகன் சந்திரவதனுக்ககே முடி சூட்டப்பட்டது.இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது.இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான்.

வளரப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடு என்று வேண்டினான்.சனீஸ்வர பகவான் அவனது நியாயத்தை உணர்ந்து ஏழரைநாளிகை மட்டும் அவனை பிடித்துக்கொள்வதாக கூறி பல கஷ்டங்களை கொடுத்தார்.பின்பு அவன் முன் தோன்றி உன்னைப்போன்ற நியாயஸ்தர்களை பிடிக்க மாட்டேன் என்றும் இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை காரணம் என்று கூறி மறைந்தார்.பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினான் என வரலாறு கூறுகிறது.இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று.

முக்கிய திருவிழாக்கள்

*5 வார ஆடிப் பெருந்திருவிழா.

*2 1/2 வருடத்திற்கொரு முறை சனிப்பெயர்ச்சித் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவின் போது கோயிலில் கூடுவர்

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம்:
தேனி 30 கி.மீ.
மதுரை 100 கி.மீ.

தங்கும் வசதி :

குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தேனி நகரில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.தேனி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.

கட்டணம்: ரூ.200 லிருந்து ரூ.500 வரை.

போக்குவரத்து வசதி:

* தேனியிலிருந்துகுச்சனூருக்கு பேருந்து வசதி உண்டு.

* அருகில் உள்ள ரயில் நிலையம்: தேனி,திண்டுக்கல்,மதுரை
* அருகில் உள்ள விமான நிலையம்: மதுரை ஏர்ப்போர்ட்.

அருள்மிகு நவபாஷாணம் தலம் , தேவிபட்டிணம்

தெய்வங்கள் : நவகிரகங்கள்
பிரதிஷ்டை : ஸ்ரீராமர்பிரான்
சிறப்பு : கடல்நடுவே
புராணம் : இராமயணம்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
தீர்த்தம் : ராமர் தீர்த்தம்.
ஊர் : தேவிபட்டணம்.
புராணபெயர் : தேவிப்பூர்
பிறபெயர் : தேவிபுரம்
மாவட்டம் : ராமநாதபுரம்.

பிரார்த்தனை

*முன்ஜென்ம பாவங்கள் தீர,பிதுர்கடன் கழிக்க தர்ப்பணம் ஸ்ரார்த்தம் முதலியவை செய்யலாம்.,நவகிரக தோசங்கள் விலக இங்கு வழிபடலாம்.

*இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள்,கல்வி, செல்வம் பெருகவும் இங்கு பிரார்த்தனை செய்யலாம்.

நேர்த்தி கடன்

நவதானியங்கள் படைத்தல், நவகிரக வலம், தானம் செய்தல், தோச பரிகாரம் செய்தல் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாகும்.

கோயிலின் சிறப்பம்சம்

நவகிரக மகிமை : (நவ ஒன்பது ; பாஷாணம் கல் )நாம் முற்பிறவியில் செய்த கர்மாவின் பயனாக மனிதர்களாகப் பிறந்து நாம் செய்த பாவ புண்ணியகளின் அடிப்படையில் நம்மை வழிநடத்தி செல்வது நவகிரகங்களேயாகும்.இத் தலத்தில் உள்ள நவகிரகங்களை 9 நவ தானியங்கள் வைத்து இங்குள்ள நவகிரகங்களை வழிபட்டால் வணங்கினால் சகல பலன்களும் கிடைக்கும்.

ஸ்ரீராமனும் இத்தலமும் : வேத சாஸ்திரங்களிலே எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பாக பிள்ளையார் பூஜை, நவகிரக பூஜை செய்வது வழக்கம். ஸ்ரீ ராமபிரானும் தர்ம நெறி முறைபிறழாமல் உப்பூர் ஸ்தலத்தில் ஸ்ரீ விநாயகரை பூஜித்தபின் இத்தலத்தில் நவகிரகங்களை ஒன்பது பிடி மணல் கலவையால் பிரதிஷ்டை செய்கிறார். அவ்வமயம் கடல் கொந்தளிப்பு ஏற்பட தமது திருக்கரத்தை உயர்ந்த கடல் கொந்தளிப்பு ஏற்பட தமது திருக்கரத்தை உயர்த்த கடல் அமைதி அடைந்ததாக ஐதீகம். இராமர் பிரதிஷ்டை செய்த நவகிரங்கள் நவ
பாஷாணமாக (ஒன்பது கற்களாக) அமைந்து அன்றும் இன்றும் என்றும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

தல பெருமைகள் :

தலபெருமைகள் *ஆரவாரமில்லாத கடலின் நடுவே நவபாஷாணமாக அமைந்து நவகிரகங்கள் அருள் பாலித்து இதலத்து முக்கிய சிறப்பு

*மூர்த்தி, தலம், கீர்த்தி என்று எல்லாமே ஒன்றிணைந்து பேரின்ப நிலையை அளிக்கும் தலம்தான் நவபாஷாணம் ஆகும்.

*ஸ்ரீ ராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணலால் நவகிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம்.

*பிதுர் கடன் செய்பவர்கள் தர்ப்பணம் செய்யலாம்.

*அனைவரும் இங்குள்ள நவகிரகங்களை தொட்டு அவரவர் கைகளாலேயே அபிஷேகம்,அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை .

*ஸ்ரீ ராம பிரானுக்கு சனி தோசத்தை நிவர்த்தி செய்த தலம்.

*பார்வதி பரமேஸ்வரனும் ஸ்ரீ இராமபிரானுக்கு ஆசிகள் வழங்கி இத்தலத்திலே சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வராராக எழுந்தருளியுள்ளார்.

*சேது தலத்தை தரிசித்தாலே முன் கர்ம பாபங்கள் அனைத்தும் விலிகி புண்ணியம் ஏற்படும்

*புராண காலம் தொட்டு கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவகிரகங்கள் அமைந்த அற்புத காட்சி ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

தல வரலாறு :

இராவணனால் சீதை சிறை வைக்கப்பட்டதை அறிந்து அவரை மீட்க ஸ்ரீ ராம பிரான் தென் திசை நோக்கி வருகிறார். வேத சாஸ்திரங்களில் எந்த ஒரு காரியம் செய்வதற்கும் முன்பு பிள்ளையார் பூஜை,நவகிரக பூஜை செய்வது வழக்கம்.அதனால் ஸ்ரீ ராமரும் உப்பூர் விநாயகரை பூஜித்த பின்பு இத்தலத்தில் நவகிரகங்களை 9 பிடி மணல் கலவையால் பிரதிஷ்டை செய்கிறார்.அவ்வமயம் கடல் கொந்தளிப்பு ஏற்பட தமது திருக்கரத்தை உயர்த்த கடல் அமைதி அடைந்ததாக ஐதீகம்.ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் நவ பாஷாணமாக (ஒன்பது கற்களாக) அமைந்து இன்று அருள் தருகின்றனர்

முக்கிய திருவிழாக்கள்

*பத்து நாள் ஆடிஅம்மாவாசை திருவிழா நாடு முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் தீர்த்தம் ஆட இத்தலத்தில் கூடுவது வெகு சிறப்பு.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ராமேஸ்வரம் 77 கி.மீ.

ராமநாதபுரம் 15 கி.மீ.

மதுரை 115 கி.மீ.
சிவகங்கை 47 கி.மீ.
தங்கும் வசதி :

குடும்பத்தோடு வரும் பக்தர்கள்ராமேஸ்வரம் அல்லது இராமநாதபுரம் நகர்களில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.

கட்டணம் ரூ.200 முதல் ரூ.600 வரை.

போக்குவரத்து வசதி : *இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் இருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு வசதியாக ராமநாதபுரத்திற்கும்,இராமேஸ்வரத்திற்கும் ரயில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.
*மதுரைஉள்ளிட்ட பெரும்பாலான மாவட்டத் தலைநகர்களிலிருந்தும் ராமநாதபுரத்திற்கும்,இராமேஸ்வரத்திற்கும் பஸ்வசதி உள்ளது..அங்கிருந்து தேவிபட்டிணத்திற்குபஸ் வசதி உண்டு.

*அருகிலுள்ள விமான நிலைம் மதுரை.
*தை அம்மாவாசை அன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.

செவ்வாய், மே 30

அருள்மிகு சொரி முத்தய்யனார் திருக்கோயில் காரையார்

மூலவர் : சொரிமுத்து அய்யனார்
மூலாதாரம் : ஸ்ரீஅய்யப்பன்
தேவியர் : பொம்மக்கா திம்மக்கா
அம்மன் : பேச்சியம்மன்
காவல்தெய்வம்: பூதத்தார்
முக்கியத்துவம் : வாலைபகடை
தீர்த்தம் : தாமிரபரணி
ஊர் : பாபநாசம்.
புராணபெயர் : காரையார்
மாவட்டம் : நெல்லை.

பிரார்த்தனை

இத்தலத்துக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் சொரிமுத்தையனாரை தங்கள் குலதெய்வமாக வணங்குகின்றனர்.குழந்தை பாக்கியம் வேண்டுவோர், திருமண பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். பில்லி சூன்யம், செய்வினை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் அத்தகைய துன்பங்கள் நீங்குகிறது.கோர்ட் வழக்குகள், தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் வருகை தந்து வழிபடுகின்றனர். மேலும் இத்தலம் அமைந் துள்ள இடம் இயற்கை எழில் சூழ்ந்துள்ள இடமாக இருப்பதால் உடற்பிணிகள் நீங்குவதாகவும் சொல்கின்றனர்.

இத்தலத்தின் மற்றொரு முக்கியமான பிரார்த்தனை சிறப்பம்சம் என்னவெனில் சபரிமலைக்கு செல்வோர் இத்தலத்தில் வந்து மாலைபோடுகின்றனர். இந்த மாலை போடுவதற்காக மட்டும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பது முக்கிய சிறப்பு

நேர்த்தி கடன்

வாலைப் பகடை சுவாமிக்கு செருப்பு காணிக்கையாக செலுத்தவது மிகவும் வித்தியாசமாக உள்ளது.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளை பக்தர்கள் செய்கின்றனர்.தங்கள் நேர்த்திகடனாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.


கோயிலின் சிறப்பம்சம்

இத்தலம் எந்தஅளவு சிறப்புமிக்கது என்பதை கீழ்கண்ட நிலைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஷேத்திரங்களின் ஆதார நிலை

நிலை : சிவன் : முருகன் : சாஸ்தா :

மூலாதாரம் திருவாரூர் திருப்பரங்குன்றம் சொரிமுத்தையனார்

சுவாதிபுஷ்டானம் திருவானைக்கா திருச்செந்தூர் அச்சங்கோயில்

மணிபூரகம் திருவண்ணாமலை பழநி ஆரியங்காவு

விசுத்தி காளத்தி குன்றுதோருடல் பந்தளம்

ஆஞ்சை காசி பழமுதிர்சோலை சபரிமலை

பிரமந்திரம் கைலாசம் கதிர்காமம் காந்தமலை

தல பெருமைகள் :

*அய்யப்பனின் முதல் மூலாதாரக் கோயில்.

*ஜாதி வேறுபாட்டை நீக்க அய்யப்பன் 2 தாழ்த்தப்பட்ட பெண்களை முத்துபட்டன் என்ற மனித அவதாரமெடுத்து திருமணம் செய்து கொண்ட தலம்.

*பசு வளர்ப்பவர்கள் தங்கள் பசு அதிக பால் சுரக்காமல் இருந்தால் வழிபட்டால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

*பூதத்தாருக்கு மணி காணிக்கை தருவது வழக்கம்.

*அய்யப்பனின் முதல் கோயில் என்பதால் சபரி மலைக்கு மாலை போட விஷேசம்.

*பொதிகை மலையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான கோயில்

தல வரலாறு :

முத்துப்பட்டர் என்ற பிராமணர் வட திசையில் வாழ்ந்து வந்த போது அவரது சகோதரர்கள் ராமாயணக் கதை பேசுகிறார்கள். அப்போது சகோதரர்கள் சீதைக்கு ராமர் என்ன உறவு எனக் கேட்க சித்தப்பன் என தவறாக முத்துப்பட்டர் சொல்லி விட முத்துபட்டரை சகோதரர்கள் அடித்து விடுகின்றனர்.அவர் தென்பொதிகை மலைக்கு வருகிறார்.அங்கு வாலைப்பகடை என்ற தாழ்த்தப்பட்டவர் வளர்த்து வரும் இரு பெண்களை சந்தித்து மனம் பறி கொடுக்கிறார். அவர்கள் இருவரையும் திருமணம் செய்ய ஜாதி ஒரு தடையாக இருப்பது கண்டு தானே தாழ்த்தப்பட்டவனாக மாறி திருமணம் செய்து கொள்கிறார்.முதலிரவன்று பசு திருடு போக அதை திருடியவர்களை தேடிப்போன இடத்தில் ஏற்பட்ட சண்டையில் முத்துப்பட்டர் கொல்லப்படுகிறார்.அதையறிந்த இரு மனைவியரும் அவருடனேயே மரணத்தை தழுவுகின்றனர்.முத்துப்பட்டரே சாஸ்தாவாக வந்ததாகவும் பின்பு அவரே சொரிமுத்தையனாராக எழுந்தருளியுள்ளதாக வரலாறு.திருவாங்கூர் சமஸ்தானம் வெளியிட்டுள்ள அய்யப்பன் வரலாற்று கெசட்டிலும் அய்யப்பனின் முதல் கோயில் இதுவே என்று கூறுகிறது.

முக்கிய திருவிழாக்கள்

ஆடி அம்மாவாசை,தை அம்மாவாசை தினங்களில் 2லட்சம் பக்தர்கள் கூடுகின்றனர்.

தவிர ஒவ்வொரு அம்மாவாசைக்கும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

ஆடி அம்மாவாசை தினங்களில் வெட்ட வெளியில் கூடாரங்கள் அமைத்து மக்கள் தங்கி வழிபடுவார்கள். ஒருமாதத்திற்கு முன்பே அரிசி, பருப்பு சாமான்களோடு மக்கள் வெள்ளமாக திரண்டு வந்து தங்கி சொரி முத்தய்யனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருநெல்வேலி யிலிருந்து 60 கி.மீ.

தூத்துக்குடி யிலிருந்து 215 கி.மீ.

தங்கும் வசதி : அடிவாரத்தில்உள்ள விக்கிரம சிங்க புரத்தில் தனியார் விடுதிகள் உள்ளன.இருந்தாலும் குடும்பத்தோடு வரும் பக்தர்கள் அம்பையிலோ நெல்லையிலோ தங்கி கோயிலுக்கு சென்றுவரலாம்.

கட்டணம் ரூ.100 முதல் ரூ.150 வரை.

போக்குவரத்து வசதி : *நெல்லையிலிருந்து அடிக்கடி பாபநாசத்திற்கு நிறைய பஸ் வசதி உள்ளது.அங்கிருந்து காரையார் அணை செல்லும் பஸ்ஸில் செல்ல வேண்டும்.எனினும் வாடகை கார், வேன் மூலம் செல்லுதல் நலம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் அம்பாசமுத்திரம்.
*அருகிலுள்ள விமான நிலையம் மதுரை.

அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் நாகர்கோயில்

மூலவர் : நாகராஜர்
பிறபெயர் : நாகரம்மன்
பிரதிஷ்டை : நீருக்குள்
சிறப்பு : சுயம்பு
கருவறை : ஓலைகூரை
தலமரம் : ஓடவள்ளி
தீர்த்தம் : தெப்பக்குளம்
தனிசந்நிதி : துர்க்கை
ஊர் : நாகர்கோயில்.
மாவட்டம் : கன்னியாகுமரி.

பிரார்த்தனை

நாகசிலைகளால் சூழப்பட்ட மரங்களை சுற்றி வலம் வந்தால் நாகதோஷம் நீங்கும், குழந்தைப் பேறு கிடைக்கும்,மருந்துகளால் குணப்படுத்த முடியாத தோல் (வெள்ளை)சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகிறது.

நேர்த்தி கடன்

வெள்ளி நாகம் படைத்தல்,பால் ஊற்றுதல், மஞ்சள் அபிஷேகம் செய்தல், முட்டை வைத்தல்,உப்பு மிளகு காணிக்கை

கோயிலின் சிறப்பம்சம்

கருவறை சிறப்பு:

பெரிய கோயிலாக இருந்தாலும் இங்கு மூலவர் கருவறையின் மேற்கூரை வெறும் ஓலை மட்டுமே வேயப்பட்டுள்ளது.விமானம்கிடையாது, பீடமும் கிடையாது.வருடத்திற்கு ஒருமுறை கூரை வேயும் போது பாம்பு வருவது வழக்கம்.மூலவர் அமர்ந்திருக்கும் இடம் எப்போதுமே ஈரமாக இருப்பது அதிசயம்.மூலவர் இங்கு தண்ணீர் நடுவில்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

தல பெருமைகள் :

*நாக வழிபாட்டுக்கென்றே இருக்கும் தனிப்பட்ட கோயில்

*மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தண்ணீர் ஊற்றிலிருந்து எடுக்கப்படும் மண்ணே இக்கோயிலின் முக்கிய பிரசாதமாகும்.இது ஆறு மாத காலம் கறுப்பு நிறமாகவும், எஞ்சிய நாட்களில் வெள்ளை நிறமாகவும் மாறி வருகிறது என்பர்.எவ்வளவோ காலமாக எடுக்கும் அந்து மண் குறையாமலிருப்பது அதிசயம்.

*ஓட வள்ளி மரத்தின் இலைகள் சாப்பிட்டால் தொழுநோய் குணமடையும்.ஒவ்வொரு இலையும் தனி தனி சுவையாக இருப்பது புதுமை.

தல வரலாறு :

புல்லும் புதரும் நிறைந்திருந்த இந்த இடத்தில் இளம் பெண்ணொருத்தி புல் அறுக்க, அவளது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு ரத்தம் பெருக்கெடுத்தோடியது. இதுகண்டு அஞ்சிய பெண் பக்கத்துக் கிராமத்திலிருந்து சிலரை அழைத்துவர அவர்களும் இந்த அதிசயத்தைப் பார்த்து அந்த இடத்தில் ஒரு சிறு கோயிலை அமைத்து வணங்கி வந்தனர். இதைக் கேள்வியுற்றுப் பல இடங்களிலிருந்தும் மக்கள் திரளாக அங்கே வந்து வணங்கினர்.பின் தொழுநோயால் வருந்திய களக்காட்டு மன்னர் இக்கோயிலில் வந்து பிரார்த்திக்க நோய் குணமானது.இதனால் அவர் இக்கோயிலை கட்டினார்.பின்னர் நாளடைவில் இக்கோயில் பிரபலமானது

முக்கிய திருவிழாக்கள்

*தைத் திருவிழா 10 நாள் 5 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.

*ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் 10ஆயிரம்பக்தர்கள் கூடுவர்.

*தவிர ஆயில்ய நட்சத்திரத்தன்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பக்தர்கள் பெருமளவில் கூடுகிறார்கள்.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ.

மதுரையிலிருந்து 230 கி.மீ.

தங்கும் வசதி : குடும்பத்தோடு வரும் பக்தர்கள் நாகர் கோயில் நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வருதல் நலம்

கட்டணம் ரூ.150 முதல் ரூ.700 வரை.

போக்குவரத்து வசதி : * தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து நாகர்கோயிலுக்கு நிறைய பஸ் வசதி உள்ளது.

*அருகிலுள்ள ரயில் நிலையம் நாகர்கோயில்
*அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம், மதுரை.

அருள்மிகு மகா சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர்


அம்பிகை : மகாசரஸ்வதி
தலம் : ஞானபீடம்
பிறபெயர் : கலைமகள்
பெருமை : கல்விகடவுள்
உயரம் : 5 அடி
சிறப்பு : தஷிணதிரிவேணி
கையில் : அஷரமாலை
வாகனம் : அன்னம்
முத்திரை : சின்முத்திரை
ஊர் : கூத்தனூர்
மாவட்டம் : திருவாரூர்

பிரார்த்தனை

*கல்விக்கடவுள் சரஸ்வதி என்பதால் இத்தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கீர்த்தியும், புகழும் அடைவர்.

*குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்த்துவிடுபவர்கள் இத்தலத்தில் அம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்தவிட்டு ஆரம்பகல்வியை ஆரம்பிக்கிறார்கள்.

*உயர்கல்வி கற்க விரும்புவர்கள், பாடத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள், கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலோர் இத்தலத்தில் வந்து வழிபட்டு தங்கள் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

*இத்தலத்தில் புரட்டாசி நவராத்திரியிலும், வைகாசி விசாகத்தன்றும் வழிபடுவோர் கலைவாணியின் கடாட்ச்சத்திற்கு பாத்திரமாவர்.பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வழிபட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றனர்

*இத்தலத்தில் அதாவது கோவில்பத்து கூத்தனூரில் துவங்கி ருத்ரகங்கை வரையான அரிசொல் ஆற்றங்கரையில்(அரசலாற்றுக் கரையில்) தர்ப்பணம் முதலிய பிதுர் கர்மங்கள் மிகவும் விசேசமானது.அதுவும் மகரமாதத்தில் தர்ப்பணங்களை இயற்றுவது பெரும்பேருகளை தரவல்லது என புராணம் கூறுகிறது.

*மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்பிகை பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்தி கடன்

*கல்வி வரம் வேண்டுவோர் அம்பிகைக்கு தேன் அபிசேகம், பால் அபிசேகம் ஆகியவற்றை முக்கிய நேர்த்திகடன்களாகச் செய்கின்றனர்.

*அம்பிகைக்கு வெள்ளை வஸ்திரம், வெண் தாமரை ஆகியவற்றை சாத்துவதையும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

*தவிர தேன், பால், நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், தயிர், நெய், பழரசம், இளநீர்,சந்தனம்,பன்னீர் ஆகியவற்றால் அம்பிகைக்கு அபிசேகம் செய்கின்றனர்.

*மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.

*தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

கோயிலின் சிறப்பம்சம்

*மகா சரஸ்வதி :

வெள்ளுடை தரித்து , வெண்தாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்னை இடது கீழ்க்கையில் புத்தகமும், வலது கீழ்க்கையில் சின்(அபய) முத்திரையும், வலது மேல் கையில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்தகலசமும் தாங்கி ஜடாமுடியும் துடியிடையும் கருணைபுரியும் இருவிழிகளும் ஞானம் தருவதாகவும் மூன்றாவது திருக்கண்ணும் புன்னகை தவழும் திருவாயுமாய் கிழக்கு முகமாக வீற்றிருந்து அருளாட்சி புரிகிறாள்.

*அட்சர மாலை : அம்பிகை படைப்பின் நாயகி என்பதால் சிருஷ்டியின் அடிப்படையை உணர்த்தும் வகையில் அட்சர மாலையை வலது மேல் கையில் கொண்டிருக்கிறாள்.

*அமிர்த கலசம் ; இது தவத்தை குறிப்பது.இடது மேல் கையில் உள்ளது.அம்பிகையை தியானிப்பதன் மூலம் ஞானத்தால் முக்தி ஆனந்தத்தையும் பெறலாம் என்பதை குறிக்கிறது அட்சர மாலை.

*புத்தகம் : கற்றது கையளவு ; கல்லாதது உலகளவு என்பதை உணர்த்துவற்காக இடதுகீழ்க்øயில் புத்தகம் கொண்டிருக்கிறாள்.

*சின் முத்திரை : தன்னை அடைந்தவர்களுக்கு ஞானத்தை வழங்கும் பேரருட்சக்தியாக சின்முத்திரை அதாவது அபய முத்திரை கொண்டு விளங்குகிறாள்.

*வாகனம் : இத்தேவியின் வாகனம் வெண்ணிறமான அன்னம். நீரை ஒதுக்கிப்பாலை மட்டும் அருந்தும் தன்மை கொண்டது அன்னம்.அதுபோல பக்தர்களின் தீமை அகற்றி நன்மை தருபவள்.

தல பெருமைகள் :

*கலைமகளான சரஸ்வதிக்கு என்று அமைந்திருக்கும் தனிக்கோயில்.

*கல்விக்கடவுள் சரஸ்வதி வீற்றிருக்கும் இத்தலம் ஞானபீடம் ஆகும்.

*இத்தலம் தட்சிண திரிவேணி சங்கமம் என்ற பெயரும் புகழும் பெற்றது.

*இத்தலத்தில் உள்ள நர்த்தன விநாயகர் சுயம்புமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

*இத்தலத்தின் பரிவார தெய்வங்களாக வலம்புரி விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்மபுரீசுவரர், பாலதண்டாயுதபாணி, அன்னம், பலி பீடம் ஆகியன உள்ளன.

*ஒட்டக்கூத்தர், ஒவாத கூத்தர், புருஷோத்தம் பாரதி மற்றும் பலர் இங்கு வழிபட்டள்ளனர்.

*தொன்மைக்கும் புராணங்களை அடுத்து வரலாற்று ரீதியாக பார்த்தால் இவ்வூர் இரண்டாம் ராஜராஜசோழனால் தனது அவைப் புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டு கூத்தனூர் ஆயிற்று.

*ஒட்டக்கூத்தரால் அமைக்கப்பெற்ற ஆலயம் இது.

*கும்பகோணம் சாரங்கபாணி என்பவரின் மகனுக்கு பேச்சுத்திறன் கிடைக்கப்பெற்ற தலம் இது.

*கூத்தனூரில் கோயில் கொண்டிருக்கும் அம்பிகையின் தோற்றத்தை சௌந்தர்யலகரியின் 15 ம் பாடல் விளக்குகிறது.

*சரஸ்வதியை எவன் ஒருமுறை வணங்குகிறானோ அவனுக்கு தேனும் பாலும் திராட்சையும் போன்ற இனிய சொற்கள் சித்திக்கப்பெறுவான் என்றும் காவியங்களுக்குக் கர்த்தாவாக விளங்குவான் என்றும் சௌந்தர்ய லகரி கூறுகிறது.

தல வரலாறு :

பிரம்மலோகத்தில் படைப்பு நாயகன் பிரம்மாவிற்கும் அவரது நாயகி மகாசரஸ்வதிக்கும் வாதம் ஒன்று ஏற்பட்டது.அதாவது தாம் வீற்றிருப்பதால் தான் பிரம்மலோகம் இத்தனை பேரழகாக உள்ளது என்று மகாசரஸ்வதி கூற அதை ஏற்க மறுத்து பிரம்மலோக மகத்துவத்துக்கு தானே காரணம் என்று பிரம்மன் பதிலுக்கு கூற விவாதம் முற்றி பெரிய விவகாரமாகிவிட்டது.இருவரும் பரஸ்பரம் சபித்துக் கொண்டனர்.இதன் விளைவாக பூலோகத்தில் இருவரும் மானிடராகப் பிறந்தனர்.அதிலும் ஒரே தம்பதிகளுக்கு பிறந்ததால் அண்ணன் தங்கைகளாக வளர்ந்தனர்.வளர்ந்த பின் இவர்களது பெற்றோர் இவர்களுக்கு வரன் தேட ஆரம்பிக்கையில் இருவருக்கும் தங்கள் பூர்வோத்திரம் நினைவுக்கு வரவே இவர்கள் சிவபெருமானை வழிபட்டனர்.ஈசனும் உளம் கசிந்து கூத்தனூரில் கங்கையுடன் சரஸ்வதியும் அந்நதியின் ஓர் அம்சமாகி ருத்ர கங்கை ஆபத்சகாயர் பரிமளநாயகிக்கு அபிசேக நீராகி, அத்துடன் அரிசொல் நதிக்கரையில் மகாசரஸ்வதியாகக் கோயில் கொண்டாள்.பிரம்மாவும் ஆபத்சகாயரை வழிபட்டு தன் பழைய நிலையை அடைந்தார்.இவ்வாறு பிரம்மாவும் சரஸ்வதியும் ருத்ரகங்கையில் இறைவனை வழிபட்டு பரஸ்பர ரலாம் சாபங்களிலிருந்து விமோச்சனம் பெற்றனர் என்று தல வரலாறு கூறுகிறது.

முக்கிய திருவிழாக்கள்

*புரட்டாசி நவராத்திரி 18 தினங்கள் 9 நாள் ஊஞ்சல் உற்சவம்

*சரஸ்வதி பூஜை அன்று பாத தரிசனம் ; விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஆரம்பகல்வி கற்பித்தல் ஆரம்பித்தல் ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம்.

*மாதாந்திரம் பௌர்ணமி மூலா நட்சத்திரத்தில் அம்பாள் ஜென்மம் மூலம் நட்ச்சத்திரத்தில் இத்தலத்தில் விசேச பூஜைகள் நடைபெறும்.

*வாரந்தோறும் புதன் கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும்.

*வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

பொது தகவல்கள்

தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண்: 91 4366 239909.

*முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :

மயிலாடுதுறை 21 கி.மீ.
திருவாரூர் 19 கி.மீ.

*தங்கும் வசதி : குடும்பத்தோடு வருபவர்கள் மயிலாடுதுறை அல்லது திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.மயிலாடுதுறை , திருவாரூர் ஆகிய ஊர்களில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.

*கட்டணம் ரூ.250 முதல் ரூ.600 வரை.

*போக்குவரத்து வசதி : *மயிலாடுதுறை திருவாரூர் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்து கோயிலை எளிதில் அடையலாம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.

அருள்மிகு சூரியனார் திருக்கோயில்,தஞ்சாவூர்

மூலவர் : சிவசூர்யன்
நவகிரகதலம் : சூரியன்
வடிவம் : ரதவடிவம்
தேவி : உஷாதேவி
தேவி : சாயாதேவி
விநாயகர் : கோள்தீர்த்தவர்
தலமரம் : வெள்ளெருக்கு
தீர்த்தம் : சூரியதீர்த்தம்
ஊர் : சூரியனார்கோயில்
மாவட்டம் : தஞ்சாவூர்

பிரார்த்தனை

*நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மையானது என்பதால் இங்கு பக்தர்கள் பெருமளவில் வருகை புரிந்து தங்கள் பல்வேறு கஷ்டங்கள நீங்க பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

*தோஷ நிவர்த்தி : ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து தொடர்நது பன்னிரெண்டாவது ஞாயிற்றுகிழமை முடிகிற வரை சுமார் இரண்டரை மாத காலம் (78 நாட்கள்) இத்தலத்திலே தங்கியிருந்து நாடோறும் நவதீர்த்தங்களிலும் நீராடி உபவாசமிருந்து திருமங்கலகுடி பிராணநாதரையும் மங்கள நாயகியையும் இத்தலத்து நாயகர்களையும் முறைப்படி வழிபட்டு வரவேண்டும்.தத்தமது தோஷத்துக்கான பரிகாரங்களையும் செய்து வரவேண்டும். இப்படிச் செய்து வந்தால் மேற்படி தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

*சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுகின்றனர்.

*இத்தலத்தில் வழிபடுவதால் நவகிரக தோசங்கள் நீங்கும். காரியத் தடை விலகும்.

நேர்த்தி கடன்

*நாடி பரிகாரம் செய்வது இங்கு விசேசம்.நவகிரக ஹோமம் செய்யலாம்.

*சூர்ய அர்ச்சனை செய்யலாம்.

*சர்க்கரை பொங்கல் அபிசேகம் செய்வது இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது.

*நவகிரக தோசம் வில நவகிரக அர்ச்சனை, நவகிரக அபிசேகம் செய்தல் நல்லது.

*தவிர அபிசேகம் அர்ச்சனை துலாபாரம், கோதுமை,வெல்லம், விளைச்சல் ஆகியவற்றறை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

*குழந்தை வரம் வேண்டுவோர் தூளி கட்டி வழிபடுகிறார்கள்.

*இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம்.

*அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

கோயிலின் சிறப்பம்சம்

*சூர்ய பெருமான் கருவறை :

கருவறையில் சூர்ய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார்.சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார்.சூரிய பகவான் உக்கிரம் அதிகம்.அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார். அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது.மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது.சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.

*கோயில் பழமை :

சங்க காலத்தில் பூம்புகாரில் இருந்த உச்சிக்கிழான் கோட்டம் என்ற சூரியன் கோயில் கடல்கோளால் அழிந்து விட்டபோதிலும் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயில் இன்றும் பொலிவுடன் விளங்கி வருகிறது.சூரியனார் கோயில் எனும் இத்தலம் தொன்மைச் சிறப்பாலும் புராணவரலாற்றுச் சிறப்பாலும் நவகிரகங்களுக்கென தனித்தமைந்த கோயிற்சிறப்பாலும் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் சிறப்பாலும் புகழ் வாய்ந்த தலமாகும்.

தல பெருமைகள் :

*சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார் கோயில்.தெற்கே இந்த சூரியனார் கோயில்.கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.

*நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.

*இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு

*உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்படித்தக்கது.

*இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.

*இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.

*இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.

*திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோயில்இது.

தல வரலாறு :

காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடையும் வரம் வேண்டி நவகிரகங்களை வேண்டி வழி பட்டார். நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர்.இதனை அறிந்த பிரம்ம தேவன் கோபம் கொண்டார்.சிவபெருமானின் ஆணைப்படி எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டுமே கொடுக்குமாறு கட்டளையிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் வரம் தரும் அளவுக்கு மீறிச் செயல்பட்டுவிட்டனர். எனவே நீங்கள் பூலோகத்தில் தொழுநோய் பீடித்து உழல்வீர்களாக என சாபமிட்டார்.அதன்படி பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர்.அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும்.பல்வகைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுகிரகம் செய்வீர்களாக என அருளினார் என்பதே இத்தலத்தின் வரலாறு ஆகும்.

முக்கிய திருவிழாக்கள்

*ரதசப்தமி உற்சவம் தை மாதம் 10 நாட்கள் திருவிழா இது இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும்.

*சிறப்பு வழிபாடு பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.மகா அபிசேகம் என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.

*சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி ஆகியநாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிசேக ஆராதனைகள் நடக்கும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வர்.

பொது தகவல்கள்

தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண்: 91 435 2472349.

*முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :

கும்பகோணம் 17 கி.மீ.

மயிலாடுதுறை 22 கி.மீ.

*தங்கும் வசதி : குடும்பத்தோடு வருபவர்கள் கும்பகோணம் நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.கும்பகோணம் நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.

கட்டணம் ரூ.150 முதல் ரூ.600 வரை.

*போக்குவரத்து வசதி :

*கும்பகோணத்தில் இருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் ஆடுதுறையிலிருந்தும் ஆடுதுறையிலிருந்தும் அணைக்கரை திருப்பனந்தாளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.பேருந்தில் வருவோர் திருமங்கல குடி காளியம்மன் கோயில் பேருந்து நிற்கும் இடத்தில் இறங்கி வடகிழக்கே 2 பர்லாங் நடந்து வந்தால் சூரியனார் கோயிலை அடையலாம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் ஆடுதுறை, கும்பகோணம், மயிலாடுதுறை
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.

அருள்மிகு நாவலடி கருப்பண்ணசாமி திருக்கோயில்,மோகனூர்

சுவாமி : கருப்பண்ணசுவாமி
பிறபெயர் : பட்டமரத்தான்
பெருமை : சுயம்பு
அம்மன் : செல்லாண்டியம்மன்
விசேசம் : சீட்டுஎழுதல்
தலமரம் : நாவல் மரம்
சிறப்புமரம் : வேம்புமரம்

கோயிலின் சிறப்பம்சம்

சீட்டு எழுதிப் போடுதல் : இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது தொழில் வியாபாரம் சம்பந்தமாக தங்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும் தங்கள் குடும்பங்களுக்கு குழந்தை வரம் கேட்டும் மனு எழுதி அதாவது ஒருவருக்கு நாம் மனு எழுதினால் எப்படி எழுதுவோமோ அது போல எழுதி சன்னதியில் வைத்து பூஜை செய்து கோயிலில் உள்ள பட்ட மரத்தில் கட்டிவிட்டு செல்கின்றனர்.சுவாமியோடு நேரடியாக கஷ்டங்கள் பற்றியும் அதனை தீர்த்து வைக்குமாறு பேசுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

கருப்பணசுவாமியின் பிறபெயர்கள் : நாவலடியான் , ஜட்ஜ் துரை, கூனன்

தல பெருமைகள் :

*2000 வருடம் பழமையான கோயில் இது என்கிறார்கள்.

*நாவலடியான் என்கின்ற கருப்பண்ண சுவாமி சுயம்புவாக தோன்றி யுள்ளது இங்கு சிறப்பு.

*சுயம்பு மூர்த்தி இங்கு குழிக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

*சுயம்புவுக்கு பின்புறம் பட்டுப்போன பழங்கால நாவல் மரம் இன்னமும் உள்ளது

*செங்குட்டுவன் கள வேள்வி செய்த இடம் இத்தலம்

*இங்குள்ள செல்லாண்டியம்மன் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலில் நாள்தோறும் அசைவ பூஜைகள் மட்டுமே செய்யப்படுகின்றன.

தல வரலாறு :

சிவசக்தி வடிவமாகிய இறைவனே காவல் தெய்வமாகிய கருப்பண்ண சுவாமியாக இங்கு உள்ளான். மோகனூரில் இன்றும் உப்பிலியப்பன் திட்டு என்று அழைக்கப்பட்டு வரும் இடத்தை அரண்மனையாக கொண்டு மோகூர் பழையன் எனும் மன்னன் அன்றைய மோகனூரை ஆண்டு வந்த போது அவன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்த நாவலடியானை தரிசித்து எடுத்து வந்தான்.இந்த பழையன் சுயம்புக்கு தெற்கே உள்ள வேம்புமரத்தை காவல் மரமாக அறிவித்து தரிசித்து வந்தான்.இந்த நாவல் மரம் செங்குட்டுவ மன்னன் படையெடுப்புக்குப்பின் பட்டுப்போய் அதன் சுவடு மட்டும் தற்போது உள்ளது.சுவாமி பட்டுப்போன நாவல் மரத்துக்கு அடியில் இருந்ததால் பட்டமரத்தையன் என்றும் அருகில் இருந்த நாவல் மரத்து நிழலில் இருந்ததால் நாவலடியான் என்றும் பெயர் பெற்றார்.

முக்கிய திருவிழாக்கள்

*மாரியம்மன் திருவிழா 15 நாள் திருவிழா பங்குனி மாதம் லட்சக்கணக்கான அதிகமான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.

*காளியம்மன் திருவிழா 8 நாள் சித்திரை மாதம் அன்று ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : நாமக்கல் 20 கி.மீ.

ராசிபுரம் 75கி.மீ.
கரூர் 45 கி.மீ.
ஈரோடு 75 கி.மீ.

தங்கும் வசதி :

*குடும்பத்தோடு வரும் பக்தர்கள் நாமக்கல் நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு அங்கிருந்து மோகனூர் வந்து கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.

கட்டணம் ரூ.200 முதல் ரூ.500 வரை.

போக்குவரத்து வசதி : *நாமக்கல் நகரிலிருந்து மோகனூருக்கு நகர பேருந்து வசதி அடிக்கடி இருப்பதால் மோகனூர் கோயிலுக்கு செல்வது எளிது.

*அருகிலுள்ள ரயில் நிலையம் சேலம்
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி

திங்கள், மே 29

அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்,நாமக்கல்


சுவாமி : ஸ்ரீ ஆஞ்சநேயர்
பிறபெயர் : பக்தஆஞ்சநேயர்
பிரம்மாண்டம் : சிலை
உயரம் : 22 அடி
பீடம் : 4 அடி
கோபுரம் : இல்லை
ஊர் : நாமக்கல்
புராணபெயர் : ஸ்ரீசைலஷேத்ரம்
பிறபெயர் : நாமகிரி
மாவட்டம் : நாமக்கல்

பிரார்த்தனை

* இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை,நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்குசாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும். நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன. தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன. நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.

*நவகிரக தோஷம் நீங்குதல் : இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டற்கு இணையானது என்பதால் நவகிரக தோசம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.

நேர்த்தி கடன்

ஆஞ்சநேயருக்கு வெத்தலை மாøல் சாத்துதல் , எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடைமாøல் சாத்துதல், பூமாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திகடனாக செலுத்தப்படுகின்றன. தவிர வெண்ணெய் காப்பு போன்ற சிற்ப்பு அபிசேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.

வடைமாலை சாத்துவது ஏன் ? : முன்பு ஒருசமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள்.பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்தி படுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி ராகு இவர்களுடைய இடையூறிலிருந்து மனிதர் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.

கோயிலின் சிறப்பம்சம்

சிலை அமைப்பு

மிக பிரம்மாண்டமாக காற்று , மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்

கோபுரம் இல்லாதது ஏன் ? : லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்

தல பெருமைகள் :

*இங்குள்ள ஆஞ்ச நேயர் சிலை மிகவும் பிரம்மாண்ட மானது.பீடத்தி லிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது.

*இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.

*திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் இருக்கும் சன்னதி இது.

*தமிழகம் முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோயில்.

*எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோயில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

*இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோயில் இது.

*இங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேரெதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார்.

தல வரலாறு :

நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் சாதாரணமாக ஒரு துளை உள்ள சாளக்கிராமம் கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு இந்த நதியில் குளிக்கும் போது 2 துளையுள்ள சாளக்கிராமம் கிடைக்கிறது. சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் எடுத்த இடத்தில் வைத்து விட்டு திரும்பி வரும்போது நாமகிரித்தாயாரிடம் இதை கொடுத்த விட்டு ராமஜெபம் செய்கிறார்.நீண்ட நேரம் ஆனதால் தாயாரும் அதை கீழே வைத்து விடுகிறார். ஆஞ்சநேயர் ஜெபம் முடித்து விட்டு வந்து பார்க்கையில் சாளக்கிராமம் பெரிய மலையாக மாறிவிட்டிருந்தது.அதை அசைக்ககூட முடியவில்லை.அப்போது மகாவிஷ்ணு நரசிம்ம கோலத்தில் காட்சி தந்து ராமருக்கு நீ பணிவிடை செய்துவிட்டு என்னை தொழ வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டிய காரியங்களை செய்து கொடு என்று கூற அதுபடியே இங்கு ஆஞ்சநேயர் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

முக்கிய திருவிழாக்கள்

*மார்கழி மாதம் அம்மாவாசை அனுமத் ஜெயந்தி அன்று மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.

வாரத்தின் ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது இத்தின் சிறப்பு.தீபாவளி,பொங்கல், கிருஷ்ணஜெயந்தி,வைகுண்ட ஏகாதேசி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு தினங்கள் ஆகிய வருடத்தின் முக்கிய விசேச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் மிக அதிகஅளவில் இருக்கும்.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : நாமக்கல் பேருந்து நிலையத்தி லிருந்து 1.5 கி.மீ.தூரம் மட்டுமே தங்கும் வசதி : குடும்பத்தோடு வரும் பக்தர்கள் நாமக்கல் நகரில் தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.

கட்டணம் ரூ.200 முதல் ரூ.500 வரை.

போக்குவரத்து வசதி : *நாமக்கல் நகர பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் நகருக்குள்ளேயே கோயில் இருப்பதால் எளிதில் கோயிலை அடையலாம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் கரூர்
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் பாண்டிச்சேரி

விநாயகர் : மணக்குளத்தார்
வலது : ஆதிவிநாயகர்
இடது : நாகலிங்கம்
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : கிணறு
பழமை : 400 வருடம்
கோபுரம் : தங்க கூரை
பாடல் : பாரதியார்
ஊர் : பாண்டிச்சேரி
மாவட்டம் : விழுப்புரம்

பிரார்த்தனை

*எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன.கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது.
*தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

*இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம், கிறிஸ்த்தவ மதத்தை சார்ந்தவர்களும் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

*பாண்டிச் சேரியை விட்டு வெளியூர் கிளம்புவர்கள் இத்தலம் வந்து மணக்குள விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தாங்கள் போக வேண்டிய ஊருக்கு போகிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை.அத்தனை விசேசம் படைத்தவர் இந்த மணக்குளத்து விநாயகர்.

நேர்த்தி கடன்

*உண்டியல் காணிக்கை, வெளிநாட்டு பக்தர்களின் உபயம் ஆகியவற்றால் கோயில் மிகுந்த சிறப்புடன் திகழ்கிறது.அமெரிக்க வைரத்தாலேயே கவசம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது அதற்கு உதாரணம்.

*மேலும் விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழவகைகள், தேன் , பால், தயிர், இளநீர் ,விபூதி , சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள்.

மேலும் சொர்ணா அபிசேகம், 108 கலசாபிசேகம், சங்காபிசேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

*இத்தலத்தில் முக்கியமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள்.

*வெள்ளித்தேர் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள்.

*தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.

கோயிலின் சிறப்பம்சம்

*பள்ளியறை சிறப்பு

விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது.இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார்.தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது

*கிணற்றின் மீதுதான் மூலவர்

தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது.இதன் ஆழம் கண்டுபிடிக்கமுடியவில்லை.சென்றுகொண்டே இருக்கிறது.இதில் வற்றாத நீர் எப்போதும் உள்ளது.சுவாமி பீடம் இந்த தண்ணீர் மீதுதான் உள்ளது.இது முன்காலத்தில் இருந்த குளமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

தலபெருமைகள் :

*அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே

*உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார்.வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது.

*விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது.இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவிகளாக உள்ளனர்.

*சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார்

*விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பது இங்கு மட்டுமே

*தொல்லைக் காசு சித்தர் இந்த மணக்குளத்து விநாயகரை வணங்கியுள்ளார்.

*பாரதி, அரவிந்தர் அன்னை ஆகியோர் இத்தலத்தின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

*இங்கு தினந்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது.மூன்று வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்

*உலகில் உள்ள எல்லா விதமான விநாயகர் ரூபங்களையும் சுதையாக இங்கு செய்து வைத்துள்ளனர் என்பது சிறப்பான அம்சம்.


தல வரலாறு :

பிரெஞ்சுக் காரர்கள் ஆட்சி காலத்தில் கி.பி. 1688 ல் பிரெஞ்சு காரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர்.இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில்.இத்திருத்தலதின் மேலண்டைப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன. இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில்தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் பிரபலமாயிற்று.

முக்கிய திருவிழாக்கள்

*விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

*அது தவிர ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தில் பிரம்மாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள். புதுவருடம் பிறக்கும் அந்த நாளில் மணக்குள விநாயகரின் திருமுகத்தை தரிசிக்க அவரின் ஆசியோடு அந்த புது வருடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆவலில் இத்திருத்தலத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கமாக இருக்கிறது.

*பிரம்மோற்சவம் ஆவணி 25 நாட்கள் திருவிழா
*பவித்திர உற்சவம் 10 நாட்கள் திருவிழா

*இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிசேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்.

*மேலும் வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ் புத்தாண்டு தினம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

பொது தகவல்கள்

*முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :

சென்னை 160 கி.மீ.
விழுப்புரம் 40 கி.மீ
கடலூர் 23 கி.மீ.

*தங்கும் வசதி :

குடும்பத்தோடு வரும் பக்தர்கள் பாண்டிச்சேரி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
கட்டணம் : ரூ.200 முதல் 800 வரை

*போக்குவரத்து வசதி :

*பஸ்வசதி : பாண்டிச்சேரி நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வரலாம்.சென்னையிலிருந்து பாண்டிக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. மேலும் பாண்டிக்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

*அருகில் உள்ள ரயில் நிலையம் : பாண்டிச்சேரி
*அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை

அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில் திருச்சி



பிரதானம் : உச்சிப் பிள்ளையார்
மூலவர் தாயுமானவர்
அம்பாள் : மட்டுவார்குழலம்மை.
பெருமை : சுயம்பு
சிறப்பு : மலைக்கோயில்
அடிவாரம் : மாணிக்க விநாயகர்
தல மரம் : வில்வ மரம்
தீர்த்தம் : தெப்பக் குளம்
ஊர் : மலைக்கோட்டை.
மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

பிரார்த்தனை

சுகப்பிரசவம் நடக்க தாயுமானவருக்கு வாழைத்தார் கட்டி (சுகப்பிரசவம்) வழிபடலாம்.விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நடைபெறுகிறது.
இத்தலத்தில் இறைவனை வழிபட்டால் உடல்நலம், கடன் தீர்தல்ல நோய் நீக்கம், தோற்றப் பொலிவு, மனத்தூய்மை, ஐயம் நீங்குதல், ஆயுள் நீட்சி, நன்மக்கட்பேறு, பரமுக்தி, இனிய குரல், பயிர்வளம், எமபய நீக்கம், இனிய போகங்கள், திருமகள் காட்சி பொறுமை முதலிய நற்பேறுகளை அடையலாம்.

நேர்த்தி கடன்

வாழைத்தார் வாங்கி கட்டுதல் இத்தலத்தில் முக்கிய நேர்த்திகடனாக உள்ளது.சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

கோயிலின் சிறப்பம்சம்

*குடைவரைக்கோயில்
மலைப்பாறையாகத் தோற்றமளிக்கும் இத்தலத்தில் மலையை குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும் மலையைக் குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும் மேல்நிலையில் ஒரு குடைவரைக் கோயிலும் பழம்பெருமையுடன் அமைக்கப்பெற்றுள்ளன.அவைகளில் காணப் பெறும் கல்லெழுத்துக்கள், தமிழக வரலாற்றிற்கு உதவுகின்றன.

*மூன்று நிலைகள் அம்சம்

மலை மூன்று உச்சிகள் கொண்டது.தாயுமானவர் திருக்கோயில், மட்டுவார் குழலம்மை திருக்கோயில், உச்சி விநாயகர் திருக்கோயில் என்ற 3 மலையுச்சிகளைக் கொண்டதால் முத்தலைமலை என்று பெயர் பெற்றது.

*சுவாமியின் வேறு சில திருப்பெயர்கள் திருமலைக் கொழுந்து நாதர், செவ்வந்தி நாதர், திருமலைப்பெருமான் அடிகள்

*தலவிநாயகர் : செவ்வந்திவிநாயகர்
*தலமுருகன் : வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான்
*திருச்சியின் புராணப்பெயர்கள்: திருச்சீர புரம், சிராப் பள்ளி
*தலச்சிறப்பு : தேவாரப்பாடல் பெற்றதலம்
தவிர மாணிக்க வாசகர், அருணகிரி நாதர், தாயுமான அடிகள் எல்லப்ப நாவலர் மற்றும் பலர் பாராட்டி பாடியுள்ளனர்.

*தல குரு : ஸ்ரீ மௌன குரு சுவாமிகள்
*தல அடியார் : ஸ்ரீ தாயுமான அடிகள்

தலபெருமைகள்

*273 அடி உயரத்தில் 417 படிகட்டுகள் கொண்டதாக கோயில் உள்ளது.
*ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 23,24,25 தேதிகளில் ஈசன் திருமேனி மீது சூரிய கதிர்கள் நேரடியாக விழும்.இந்த சூரியனே வந்து பூஜை செய்வது மிகவும் ஆச்சர்யமளிக்க கூடியதாக உள்ளது.

*தாயுமானவர் மலைக் கோயில் ஆன்மீக நிலையில் தென்கயிலாயம் எனும் சிறப்பு பெற்து.
*மலைப்பாதையின் மேற்பகுதி கருங்கல் கூறையால்வேயப்பட்டுள்ளது.
*கட்டிடக் கலைத் துறையில், பல்வேறு காலங்களில் வளர்ந்த கட்டிடக் கலைப் பாணிகளையுடையது.
*குகைக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

தல வரலாறு :

உச்சிப்பிள்ளையார் : விபீஷ்ணன் இராமரிடம் பெற்று வந்த அரங்கநாதர் விக்ரகத்தை விநாயகரிடம் அந்தண சிறுவன் வடிவிலிருந்த விநாயகரிடம் கொடுத்ததும் அதை அவர் பூமியில் வைத்து விட்டு மலை உச்சிக்கு ஓடி வந்து உட்கார்ந்து கொண்டாராம். சிறிது இளைப்பாறிய பின்பு திரும்பிய விபீஷ்ணன் விக்ரகத்தை எடுத்துப் பார்த்து முடியாமற் போகவே கோபம் கொண்டு சிறுவனை தேடிப் பார்த்தும் கிடைக்காமற்போகவே விநாயகர் தலையில் ஓங்கி குட்டியதாகவும், அரங்கநாதன் திருவரங்கத்திலேயே தங்கி விட்டதாகவும் ஒரு கதை உண்டு.உச்சி விநாயகரின் தலையில் குட்டு விழுந்ததற்கான பள்ளம் இன்றும் உள்ளது வியப்புக்குரியது.

முக்கிய திருவிழாக்கள்

சித்திரை தேர்த்திருவிழா 15 நாட்கள்
பங்குனி தெப்பத்திருவிழா 12 நாட்கள்
வைகாசி மலைமேல் வசந்த விழா
புரட்டாசி நவராத்திரி விழா
ஐப்பசி கந்த சஷ்டி விழா
விநாயகர் சதுர்த்தி 13நாள் திருவிழா
ஆடிப்பூரம் 8 நாள்
சமீபகாலமாக பௌர்ணமி கிரிவலம் விமரிசையாக நடைபெறுகிறது.
*பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு
*தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்
*கிரிவலம்: இப்போது மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர்



பொது தகவல்கள்


*முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருச்சி நகரின் மையப் பகுதியில் கோயில் உள்ளது.
கட்டணம் : ரூ.200 முதல் 2000 வரை

*போக்குவரத்து வசதி : *தமிழகத்தின் மிக முக்கிய நகர் திருச்சி என்பதால் போக்குவரத்துவசதி எளிது.திருச்சி நகரின் மையப் பகுதியில் கோயில் இருப்பதால்மிக எளிதாக கோயிலை சென்றடையலாம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி.
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்,ஈச்சனாரி.



மூலவர் : ஸ்ரீவிநாயகர்
பிறபெயர் : விக்னேஸ்வர்
சிறப்பு : பிரம்மாண்டம்
உயரம் : 5 அடி
பருமன் : 3 அடி
அழகு : கோபுரம்
விசேசம் : நட்சத்திரபூஜை
விழா : சதுர்த்திவிழா
ஊர் : ஈச்சனாரி
மாவட்டம் : கோவை

பிரார்த்தனை

*விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியம் தடங்கல் நீங்குகிறதாக இத்தலத்துக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதற்றகாகவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.இவை தவி வியாபார விருத்தி, தொழில் மேன்மை,உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப்பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது.

நேர்த்தி கடன்

சிதறு தேங்காய் போடுதல்,கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாத்துதல், பாலாபிஷேகம் செய்தல் முதலியன.இவை தவிர சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் , திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள்

கோயிலின் சிறப்பம்சம்

நட்சத்திரபூஜை: இத்திருக்கோயிலில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர் விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பான ஒன்றாகும்.திருக்கோயில் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால், பன்னீர், சந்தனம் , குங்குமம், மலர் மற்றும் மின் கட்டணம் போன்றவைகளும் கட்டளைதாரர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருவது மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்க ஒன்றாகும்.

தலபெருமைகள் :


*5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் அமைந்த அற்புதமான திருத்தலம்.
*கோவை மாவட்டத்தல் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோயில்.
*நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து போகும் சிறப்புபெற்ற விநாயகர் திருத்தலம்.
*அழகிய கோபுரம்,மாடங்கள், மண்டபங்கள் அமையப்பெற்ற திருக்கோயில்.


தல வரலாறு :

மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும், பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாம்ல் போய் விட்டதாம். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.இவ்வாறு விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது



முக்கிய திருவிழாக்கள்

*விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 2 நாள் திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
*சித்திரைத் திருவிழா 2நாள் திருவிழா
*மாதத்தின் கிருத்திகை, பௌர்ணமி,அம்மாவாசை, சதுரத்தி நாட்களில் இத்திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
*தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் தைபூசம்,கார்த்திகை தீபம் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்



பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கோவை 9 கி.மீ.
தங்கும் வசதி :* குடும்பத்தோடு வருபவர்கள் கோவை நகரிலேயே தங்கி,கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.கட்டணம் ரூ.300 முதல் ரூ.1000 வரை.

போக்குவரத்து வசதி : *கோவை தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரம் என்பதால் கோவை நகருக்கு முக்கிய நகரங்களிலிருந்து போக்குவரத்து வசதி அதிகம்.

*கோவை நகரை ஒட்டினாற்போல் ஈச்சனாரி இருப்பதால் குடும்பத்தோடு வருகிறவர்கள் கோவையிலிருந்து கோயிலுக்கு செல்லலாம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் கோவை.
*அருகிலுள்ள விமான நிலையம் கோவை

ஞாயிறு, மே 28

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி


மூலவர் : கற்பகவிநாயகர்
துதிக்கை : வலம்சுழி
சிறப்பு : குடவரை
ஈசன் : திருவீசர்
அம்பாள் : சிவகாமி
தலமரம் : மருதமரம்
தீர்த்தம் : ஊருணி
ஊர் : பிள்ளையார்பட்டி
புராணபெயர்: மருதம்பூர்
மாவட்டம் : சிவகங்கை

பிரார்த்தனை

இத்தலத்தில் வணங்கினால் கல்வி ,கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம்,குடும்ப நலம் ,உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும்.புதிய கணக்கு தொடங்கல், வியாபார விருத்தி ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

நேர்த்தி கடன்

சதுர்த்தி விரதம்: முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) செய்து வழிபடல்
கணபதி ஹோமம் :தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்வது மிகவும் விசேஷம்.அருகம்புல் மாலை அணிவித்து வழிபடல்

கோயிலின் சிறப்பம்சம்


*பாஸ்போர்ட் விநாயகர் : வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் விசா கிடைப்பதில் ஏதாவது பிரச்னை இருந்தால் பிள்ளையார் பட்டி கோயில் வாசலில் உள்ள பாஸ்போர்ட் விநாயகரிடம் பிரச்னையை இவரிடம் ஒப்படைத்து விட்டால் ரூட் கிளியராவது நிச்சயம்

*அமர்ந்த நிலையில் நவகிரகங்கள் : விநாயகரிடம் நவகிரகங்களின் எந்த செயல்பாடும் செல்லாது.எனவேதான் பிள்ளையார்பட்டி கோயிலில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.இங்கு வேண்டிக்கொண்டால் நவகிரகங்களின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

தலபெருமைகள்

*இங்கு இருப்பவர் வலம் சுழி விநாயகர்.இது மிகவும் விசேசமானது.
*6 அடி உயரம் கொண்ட கம்பீரமான மூலவர் குடவரைக்குள் இருக்கிறது.
*இரண்டு கைகள் கொண்ட விநாயகர்
*மூலவர் வடக்கு முகமாக இருக்கிறார்.
*குடவரைக் கோயில்.
*தமிழக்த்திலேயே உண்டியல் இல்லாத கோயில் இதுதான்.


தல வரலாறு

விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொன்று விடுகிறார்.இந்த பழி விலக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான்.சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது இக்கோயில்.மிகப்பழமையான இத்திருக்கோயில் ஒரு குடவரைக் கோயில் ஆகும்.புதிய கணக்கு தொடங்கல், வியாபாரம் ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.


முக்கிய திருவிழாக்கள்

*சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள். ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக்கட்டி கொடிஏற்றம் செய்து திருநாள் தொடங்கும்.சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளுவது விசேசம்.மிக விமரிசையாக நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்

*திருக்கார்த்திகை

*மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார்.

இவை தவிர தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்கள் , தீபாவளி ,பொங்கல் போன்ற விசேசநாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.அதுமட்டுமில்லாமல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் கோயில் இது


பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சிவகங்கை 44 கி.மீ.
காரைக்குடி 16 கி.மீ.
மதுரை 74 கி.மீ.
திருப்பத்தூர் 9 கி.மீ.

தங்கும் வசதி : குடும்பத்தோடு வரும் பக்தர்கள் கோயில் விடுதிகளிலோ அல்லது திருப்பத்தூர், காரைக்குடி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
கோயில் விடுதிகள் : பி.கே.என்.கே.விடுதி.

திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய ஊர்களில் லாட்ஜ்கள் கட்டணம் ரூ.200 முதல் ரூ.600 வரை.

போக்குவரத்து வசதி : *சிவகங்கை, திருப்பத்தூர்,காரைக்குடி ஆகிய ஊர்களிலிருந்து பிள்ளையார் பட்டிக்கு பேருந்து வசதி உள்ளது..

*அருகிலுள்ள ரயில் நிலைம் காரைக்குடி.
*அருகிலுள்ள விமான நிலையங்கள் மதுரை,திருச்சி.