செவ்வாய், மே 30
அருள்மிகு மகா சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர்
அம்பிகை : மகாசரஸ்வதி
தலம் : ஞானபீடம்
பிறபெயர் : கலைமகள்
பெருமை : கல்விகடவுள்
உயரம் : 5 அடி
சிறப்பு : தஷிணதிரிவேணி
கையில் : அஷரமாலை
வாகனம் : அன்னம்
முத்திரை : சின்முத்திரை
ஊர் : கூத்தனூர்
மாவட்டம் : திருவாரூர்
பிரார்த்தனை
*கல்விக்கடவுள் சரஸ்வதி என்பதால் இத்தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கீர்த்தியும், புகழும் அடைவர்.
*குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்த்துவிடுபவர்கள் இத்தலத்தில் அம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்தவிட்டு ஆரம்பகல்வியை ஆரம்பிக்கிறார்கள்.
*உயர்கல்வி கற்க விரும்புவர்கள், பாடத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள், கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலோர் இத்தலத்தில் வந்து வழிபட்டு தங்கள் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
*இத்தலத்தில் புரட்டாசி நவராத்திரியிலும், வைகாசி விசாகத்தன்றும் வழிபடுவோர் கலைவாணியின் கடாட்ச்சத்திற்கு பாத்திரமாவர்.பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வழிபட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றனர்
*இத்தலத்தில் அதாவது கோவில்பத்து கூத்தனூரில் துவங்கி ருத்ரகங்கை வரையான அரிசொல் ஆற்றங்கரையில்(அரசலாற்றுக் கரையில்) தர்ப்பணம் முதலிய பிதுர் கர்மங்கள் மிகவும் விசேசமானது.அதுவும் மகரமாதத்தில் தர்ப்பணங்களை இயற்றுவது பெரும்பேருகளை தரவல்லது என புராணம் கூறுகிறது.
*மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்பிகை பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்தி கடன்
*கல்வி வரம் வேண்டுவோர் அம்பிகைக்கு தேன் அபிசேகம், பால் அபிசேகம் ஆகியவற்றை முக்கிய நேர்த்திகடன்களாகச் செய்கின்றனர்.
*அம்பிகைக்கு வெள்ளை வஸ்திரம், வெண் தாமரை ஆகியவற்றை சாத்துவதையும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
*தவிர தேன், பால், நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், தயிர், நெய், பழரசம், இளநீர்,சந்தனம்,பன்னீர் ஆகியவற்றால் அம்பிகைக்கு அபிசேகம் செய்கின்றனர்.
*மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.
*தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
கோயிலின் சிறப்பம்சம்
*மகா சரஸ்வதி :
வெள்ளுடை தரித்து , வெண்தாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்னை இடது கீழ்க்கையில் புத்தகமும், வலது கீழ்க்கையில் சின்(அபய) முத்திரையும், வலது மேல் கையில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்தகலசமும் தாங்கி ஜடாமுடியும் துடியிடையும் கருணைபுரியும் இருவிழிகளும் ஞானம் தருவதாகவும் மூன்றாவது திருக்கண்ணும் புன்னகை தவழும் திருவாயுமாய் கிழக்கு முகமாக வீற்றிருந்து அருளாட்சி புரிகிறாள்.
*அட்சர மாலை : அம்பிகை படைப்பின் நாயகி என்பதால் சிருஷ்டியின் அடிப்படையை உணர்த்தும் வகையில் அட்சர மாலையை வலது மேல் கையில் கொண்டிருக்கிறாள்.
*அமிர்த கலசம் ; இது தவத்தை குறிப்பது.இடது மேல் கையில் உள்ளது.அம்பிகையை தியானிப்பதன் மூலம் ஞானத்தால் முக்தி ஆனந்தத்தையும் பெறலாம் என்பதை குறிக்கிறது அட்சர மாலை.
*புத்தகம் : கற்றது கையளவு ; கல்லாதது உலகளவு என்பதை உணர்த்துவற்காக இடதுகீழ்க்øயில் புத்தகம் கொண்டிருக்கிறாள்.
*சின் முத்திரை : தன்னை அடைந்தவர்களுக்கு ஞானத்தை வழங்கும் பேரருட்சக்தியாக சின்முத்திரை அதாவது அபய முத்திரை கொண்டு விளங்குகிறாள்.
*வாகனம் : இத்தேவியின் வாகனம் வெண்ணிறமான அன்னம். நீரை ஒதுக்கிப்பாலை மட்டும் அருந்தும் தன்மை கொண்டது அன்னம்.அதுபோல பக்தர்களின் தீமை அகற்றி நன்மை தருபவள்.
தல பெருமைகள் :
*கலைமகளான சரஸ்வதிக்கு என்று அமைந்திருக்கும் தனிக்கோயில்.
*கல்விக்கடவுள் சரஸ்வதி வீற்றிருக்கும் இத்தலம் ஞானபீடம் ஆகும்.
*இத்தலம் தட்சிண திரிவேணி சங்கமம் என்ற பெயரும் புகழும் பெற்றது.
*இத்தலத்தில் உள்ள நர்த்தன விநாயகர் சுயம்புமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
*இத்தலத்தின் பரிவார தெய்வங்களாக வலம்புரி விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்மபுரீசுவரர், பாலதண்டாயுதபாணி, அன்னம், பலி பீடம் ஆகியன உள்ளன.
*ஒட்டக்கூத்தர், ஒவாத கூத்தர், புருஷோத்தம் பாரதி மற்றும் பலர் இங்கு வழிபட்டள்ளனர்.
*தொன்மைக்கும் புராணங்களை அடுத்து வரலாற்று ரீதியாக பார்த்தால் இவ்வூர் இரண்டாம் ராஜராஜசோழனால் தனது அவைப் புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டு கூத்தனூர் ஆயிற்று.
*ஒட்டக்கூத்தரால் அமைக்கப்பெற்ற ஆலயம் இது.
*கும்பகோணம் சாரங்கபாணி என்பவரின் மகனுக்கு பேச்சுத்திறன் கிடைக்கப்பெற்ற தலம் இது.
*கூத்தனூரில் கோயில் கொண்டிருக்கும் அம்பிகையின் தோற்றத்தை சௌந்தர்யலகரியின் 15 ம் பாடல் விளக்குகிறது.
*சரஸ்வதியை எவன் ஒருமுறை வணங்குகிறானோ அவனுக்கு தேனும் பாலும் திராட்சையும் போன்ற இனிய சொற்கள் சித்திக்கப்பெறுவான் என்றும் காவியங்களுக்குக் கர்த்தாவாக விளங்குவான் என்றும் சௌந்தர்ய லகரி கூறுகிறது.
தல வரலாறு :
பிரம்மலோகத்தில் படைப்பு நாயகன் பிரம்மாவிற்கும் அவரது நாயகி மகாசரஸ்வதிக்கும் வாதம் ஒன்று ஏற்பட்டது.அதாவது தாம் வீற்றிருப்பதால் தான் பிரம்மலோகம் இத்தனை பேரழகாக உள்ளது என்று மகாசரஸ்வதி கூற அதை ஏற்க மறுத்து பிரம்மலோக மகத்துவத்துக்கு தானே காரணம் என்று பிரம்மன் பதிலுக்கு கூற விவாதம் முற்றி பெரிய விவகாரமாகிவிட்டது.இருவரும் பரஸ்பரம் சபித்துக் கொண்டனர்.இதன் விளைவாக பூலோகத்தில் இருவரும் மானிடராகப் பிறந்தனர்.அதிலும் ஒரே தம்பதிகளுக்கு பிறந்ததால் அண்ணன் தங்கைகளாக வளர்ந்தனர்.வளர்ந்த பின் இவர்களது பெற்றோர் இவர்களுக்கு வரன் தேட ஆரம்பிக்கையில் இருவருக்கும் தங்கள் பூர்வோத்திரம் நினைவுக்கு வரவே இவர்கள் சிவபெருமானை வழிபட்டனர்.ஈசனும் உளம் கசிந்து கூத்தனூரில் கங்கையுடன் சரஸ்வதியும் அந்நதியின் ஓர் அம்சமாகி ருத்ர கங்கை ஆபத்சகாயர் பரிமளநாயகிக்கு அபிசேக நீராகி, அத்துடன் அரிசொல் நதிக்கரையில் மகாசரஸ்வதியாகக் கோயில் கொண்டாள்.பிரம்மாவும் ஆபத்சகாயரை வழிபட்டு தன் பழைய நிலையை அடைந்தார்.இவ்வாறு பிரம்மாவும் சரஸ்வதியும் ருத்ரகங்கையில் இறைவனை வழிபட்டு பரஸ்பர ரலாம் சாபங்களிலிருந்து விமோச்சனம் பெற்றனர் என்று தல வரலாறு கூறுகிறது.
முக்கிய திருவிழாக்கள்
*புரட்டாசி நவராத்திரி 18 தினங்கள் 9 நாள் ஊஞ்சல் உற்சவம்
*சரஸ்வதி பூஜை அன்று பாத தரிசனம் ; விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஆரம்பகல்வி கற்பித்தல் ஆரம்பித்தல் ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம்.
*மாதாந்திரம் பௌர்ணமி மூலா நட்சத்திரத்தில் அம்பாள் ஜென்மம் மூலம் நட்ச்சத்திரத்தில் இத்தலத்தில் விசேச பூஜைகள் நடைபெறும்.
*வாரந்தோறும் புதன் கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும்.
*வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
பொது தகவல்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண்: 91 4366 239909.
*முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
மயிலாடுதுறை 21 கி.மீ.
திருவாரூர் 19 கி.மீ.
*தங்கும் வசதி : குடும்பத்தோடு வருபவர்கள் மயிலாடுதுறை அல்லது திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.மயிலாடுதுறை , திருவாரூர் ஆகிய ஊர்களில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.
*கட்டணம் ரூ.250 முதல் ரூ.600 வரை.
*போக்குவரத்து வசதி : *மயிலாடுதுறை திருவாரூர் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்து கோயிலை எளிதில் அடையலாம்.
*அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக