சனி, ஜூன் 10

அருள் மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்


அம்மன் : மாரியம்மன்.
காலம் : 18ம் நூற்றாண்டு
முன்பக்கம் : விநாயகர்
வடபுறம் : கருப்பண்ணசுவாமி
தென்புறம் : முனீஸ்வரசுவாமி
தென் வடக்கு: மதுரைவீரசுவாமி
வாயில்கள் : 3
ஊர் : திண்டுக்கல்.
புராணப்பெயர் : திண்டீஸ்வரம்
மாவட்டம் : திண்டுக்கல்.

பிரார்த்தனை

இங்கு அம்மனை வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும்.அம்மை மற்றும் உடல் உறுப்புகள் குறைபாடுகள் நீங்குகின்றன.மற்றும் தீராத நோய்களும் குணமாகின்றன.

நேர்த்தி கடன்

நோய் நொடிகளிலிருந்து நீங்க வேண்டும் என்பதற்காக மஞ்சளும், உப்பும் கொடி கம்பத்தடியில் இடுகிறார்கள்.

*கொடி ஏற்றும் போது பெண்கள் புனித நீர் அபிஷேகம் நடத்தி வார்கள் இதன் மூலம் அம்மனின் கோபம் தனிந்து நாட்டுக்கு நன்மை தருவதாக ஐதீகம்.

* தீச்சட்டி ஏந்திவருவது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுதினமும் வழிபட்டால் குழந்தைபாக்கியம் கிட்டும்...

*அவ்வாறு நன்மை பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்தும், மாவிளக்கு ஏற்றி கண்களில் வைத்து அம்னை வழிபடுவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.

இதுபோன்ற பல்வேறு நேர்த்திகடனை செலுத்துவார்கள். இதுபோன்ற காலத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் அம்மனை வழிபடுவார்கள்.

கோயிலின் சிறப்பம்சம்

திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல் உள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபபட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது. இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாக வரலாறு கூறுகிறது.இந்த மலைக்கோட்டையின் அழகான பின்ணனியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது.இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்

தல பெருமைகள் :

*அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற வீற்றிருக்கிறாள்

*8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.

* இந்த அம்மன் மற்ற தெய்வங்களை காட்டிலும் சிலையின் அடிப்ப குதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப் பாகும்.

தல வரலாறு :

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வாமாக உள்ளது.

இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயிகள் மாலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.

சன்னதியின் உள்புறத்தில் நூழைவாயில் கம்பத்தடி அமைந்துள்ளது. தாமிரத்தால் கலந்து செய்யப்பட்டடுள்ளது. அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமிகோயில், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், பின்பக்கம் தென்புரம் மூனீஸ்வரசுவாமிசன்னதி, வடபுறம் கருப்பணசாமி சன்னதி உள்ளது.காளியம்மன் சிலை, துர்கை சிலை உள்ளது. மேலும் சிம்மவாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், ஆகிய வாகனங்கள் விழாக்காலத்தில் அம்மன காட்சிதருவார்.

முக்கிய திருவிழாக்கள்

திருவிழா தொடங்க முன் அறிவிப்பாக மாசிமாதம் அம்மாவாசை முடிந்த 5ம் நாள் கொடியேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து 20 நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படும் அதிகப்பட்சமாக ஒரு மாதம் வரை திருவிழா நடைபெறும்

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திண்டுக்கல் நகரின் மத்தியில் கோயில் உள்ளது.

மதுரையிலிருந்து 50 கி.மீ.

தங்கும் வசதி :

குடும்பத்தோடு வரும் பக்தர்கள் திண்டுக்கல் நகரில் இருக்கும் தனியார் விடுதிகளில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு செனறு வரலாம்.

போக்குவரத்து வசதி :

பஸ்வசதி : திண்டுக்கல் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு ஆட்டோ அல்லது பேருந்து மூலம் கோயிலுக்கு சென்று வரலாம்

அருகில் உள்ள ரயில் நிலைம் : திண்டுக்கல்
அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை.

வெள்ளி, ஜூன் 9

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் நத்தம்


அம்மன் : மாரியம்மன்.
பெருமை : சுயம்பு
தனி சன்னதி : விநாயகர்
முருகன் : சுப்ரமணியர்
விசேசம் : மூலிகைபச்சிலை
திருவிழா : மாசிபெருந்திருவிழா
சிறப்பு : பூக்குழிஇறங்கல்
ஊர் : நத்தம்.
புராணபெயர்: இரசம்மா நகரம்
மாவட்டம் : திண்டுக்கல்.

பிரார்த்தனை

குழந்தைவரம், அம்மைநோய், உடல் ரீதியான பிரச்சினைகள் தீர பக்தர்கள் இங்கு அம்மனை வேண்டுகின்றனர்

நேர்த்தி கடன்

தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல்,கரும்பு தொட்டில் கட்டுதல்,கழுகு மரம் ஏறுதல்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தல் முதலானவற்றை பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

கோயிலின் சிறப்பம்சம்

* மூலவராக உள் ள அம்மன் அன்னத்தின் மேல் அமர்ந்து காலில் அசுரனை மிதித்த நிலையில் தாழ்மலரை பணிந்த பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத சிறப்பம்சம் ஆகும்.
* அம்மன் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.
* குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டி,மூலிகை பச்சிலை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
*டாக்டர்களால் கைவிடப்பட்ட பல நோய்கள் இங்கு தீர்க்கப்படுகின்றன.வயிற்று வலி உட்பட நிறைய நோய்கள் குணமாக்கப்படுகின்றன.
*திருவிழா நாட்களில் 40 லட்சம் மக்கள் கூடுவது தனிச்சிறப்பு.

தல வரலாறு :

லிங்கம நாயக்கன் இப்பகுதியை ஆண்டு வந்த போது, அரண்மனைக்கு பால் கொண்டு வரும் வேலைக்காரர் தினமும் பாலை கறந்து குறிப்பிட்ட இடத்தில் வைத்தவுடன் பால் குடம் காணமல் போய்க் கொண்டே இருந்தது.மன்னனுக்கு தகவல் தெரிந்து, அந்த இடத்தைப் பார்வையிட்டான். அந்த இடத்தில் சிலை ஒன்று மண்ணில் மறைந்திருப்பது கண்டு மண்வெட்டி கொண்டு தோண்ட உத்தரவிட்டான்.தோண்டும் போது அம்மன் தோளில் கடப்பாறை பட்டுவிட்டதால் ரத்தம் பீறிட்டது.அச்சிலையை எடுத்து மஞ்சள் நீராட்டி அந்த இடத்திலேயே லிங்கம நாயக்கன் பிரதிஷ்டை செய்தான்.ரத்தம் பீறிட்டு வெளிவந்த அம்மன் என்தால் அவ்வூர் காலப்போக்கில் நத்தம் என்று அழைக்கப் பட்டது.

முக்கிய திருவிழாக்கள்

16 நாட்கள் மாசிப் பெருந்திருவிழா.

புகழ்பெற்ற பூக்குழித்திருவிழா :

மாசிமாதம் அம்மாவாசை அன்று கன்னிமார் தீர்த்தம் எடுத்து வருதலுடன் திருவிழா ஆரம்பிக்கிறது. நத்தம் அருகில் உள்ள கரந்த மலையில் கன்னிமார் தீர்த்தம் உள்ளது.சந்தன கருப்பு கோயிலில் மஞ்சள் ஆடையுடன் ஒரு மைல் நீளத்துக்கு ஒரே கூட்டமாக சென்று தீர்த்தம் எடுத்து வருவர்.பின்பு கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கும்.கம்பம் என்பது ஒரே மரத்தில் 3 கிளைகளையுடையதாகும். இது பார்ப்பதற்கு திரிசூலம் போன்றிருக்கும்.அம்பாள் தன் கணவரோடு இந்த பதினைந்த நாட்களுக்காவது இருக்க விரும்புவதால்தான் இந்த கம்பம் சுவாமியாக நினைக்கப்பட்டு கோயில் நுழைவில் நடப்படுகிறது.முத்தாய்ப்பாக கழுகுமரம்(வழுக்கு மரம்) ஏறுதல், பூக்குழி இறங்குதல் என்ற மயிர் கூச்செறியும் பக்திகரமான நேர்த்திகடன்கள் நடக்கின்றன.

சற்று கடினமான உயரமான யூகலிப்டஸ் மரம் வழுவழுவென செதுக்கி விளக்கெண்ணெய்,மிளகு கடுகு ஆகிய எளிதில் வழுக்கும் பொருட்களால் பூசப்பட்டு நிலையில் அதில் பக்தர்கள் விடாப்பிடியுடன் மேலே ஏறுவார்கள். பின்பு 14 அடி நீள நெருப்பு கங்குகள் பரப்பப்பட்ட பாதையில் அம்மனை நினைத்தபடியே இறங்கி நடந்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துவார்கள். இந்த உற்சவம் மிகப் புகழ்பெற்றதாகும்.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து கோயிலின் தூரம்:

திண்டுக்கல்லிருந்து 36 கி.மீ.
மதுரையிலிருந்து 36 கி.மீ.

தங்கும் வசதி:

நத்தம் நகரிலும், திண்டுக்கல்,மதுரை ஆகிய நகர்களில் தனியார் லாட்ஜ்கள் நிறைய உள்ளன.

கட்டணம் : ரூ.100 முதல் ரூ.800 வரை.

போக்குவரத்து வசதி:

திண்டுக்கல், மதுரை நகர்களிலிருந்து 1 மணி நேர பஸ் பயணமாக நத்தம் சென்றடையலாம்.

அருகில் உள்ள ரயில் நிலையங்கள்: திண்டுக்கல்,மதுரை.
அருகில் உள்ள விமான நிலையம்: மதுரை.

அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில், ஊட்டி


அம்மன்கள் : மகா மாரியம்மன், மகா காளியம்மன்
சிறப்பு : ஒரே பீடம்
சிறப்புபெயர் : சந்தைக்கடைமாரி
தனிசந்நிதி : காட்டேரி அம்மன்
தீர்த்தம் : அமிர்தபுஷ்கரணி
பீடம் : நீலாம்பிகைபீடம்
ஊர் : உதகை
பிறபெயர் : ஒற்றைக்கல்மந்து
மாவட்டம்: நீலகிரி

பிரார்த்தனை

*அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் உடனடியாக குணமாகிறது. மேலும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஊனமுற்றவர்கள், கண்பார்வை இழந்தவர்கள் இங்குள்ள மாரியிடம் வேண்டிக் கொண்டால் பூரண குணமடைகிறார்கள்.இவை தவிர குழந்தை பாக்கியம் , திருமணபாக்கியம், விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்

நேர்த்தி கடன்

சிறு அளவில் தேர் செய்து தேர்த்திருவிழா அன்று அம்மனுக்கு செலுத்துகிறார்கள்.உப்பு அள்ளி வீசுகின்றனர்,இவை தவிர குழந்தை

வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வைத்து தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

அம்மனுக்கு விளக்கு போடுதல்,அம்மனுக்கு புடவை சாத்துதல் , அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

கோயிலின் சிறப்பம்சம்

காட்டேரியம்மன் : இங்குள்ள காட்டேரியம்மன் சன்னதியில் மந்தரித்த முடிக்கயிறு கட்டுவதால் தோஷம், பிணி, பில்லி சூனியம் , செய்வினை ஆகியவற்றி லிருந்து நிவாரணம் கிடைக்கும். குழந்தை களுக்கு திருஷ்டி நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும். குழந்தை வரம் கிடைக்கும், வண்டிமாடு, கால்நடைகளுக்கு கட்டுவதால் நல்ல பலன்கள் ஏற்படுகிறது.

நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறிய பின்பு அம்மனுக்கு கோழிக்குஞ்சு மற்றும் கருப்பு புடவையும் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

தல பெருமைகள் :

*இச்சா சக்தி, கிரியா சக்தி ,ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளை பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி அம்மன்கள் முப்பெருந்தேவிகளாக ஒரே தலத்தில் வீற்றிருக்கும் அரிய தலம்.

*மூலஸ்தானத்தில் இரு அம்பாள்கள் ( மாரி, காளி ) ஒரே ஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள்.

*இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதர்களாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

*இத்தலத்தில் உள்ள காளி உக்கிரமாக இல்லாது சாந்தமாக வீற்றிருப்பது அதிசயம்.

தல வரலாறு :

அந்த நாளில் ஊட்டி நகரில் வணிகர்கள் கூடியிருந்த போது இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். ஒளிமிக்க கண்களும், தெய்வீக மணம் கமழும் முகமும் சாந்தமே உருவெடுத்த தோற்றமும் கொண்ட அவர்கள் தாங்கள் தங்க இடம் கேட்டனர். அப்போது அங்கிருந்தவர்களுக்கு இனம் புரியா அருள் சக்தி ஏற்பட்டது.அருகில் இருந்த மரத்தடியில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அப்போது மின்னல் கீற்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் தோன்றி மறைந்தது.அதே நொடியில் அந்த இரு பெண்களும் மறைந்தனர். அதன்பின்பே வந்தவர்கள் அம்மன்கள் என்று தெரிந்து அவர்கள் வந்து தங்கிய மரத்தடியில் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர்.அதிலிருந்து இக்கோயில் சந்தைக்கடை மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.

முக்கிய திருவிழாக்கள்

*தேர்த் திருவிழா (பிப்ரவரி மாதம்) 28 நாட்கள் இந்த திருவிழா நாட்களில் துர்கை, காமாட்சி, பார்வதி, மீனாட்சி, ராஜராஜேஸ்வரி, ஹெத்தையம்மன் , பகவதி என பல்வேறு திருக்கோலங்களில் ஆதிபராசக்தி எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்

தேர் வீதி உலா வரும் போது பக்தர்கள் உப்பு அள்ளி வீசுகின்றனர்.உப்பு நீரில் கரைவது போல் தங்கள் துன்பங்கள் முழுமையாக நீங்கி அம்மன் அருள் பெறுவதாக நம்பிக்கை

அம்மாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருநாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது

*மாதந்தோறும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :

ஊட்டி நகரின் மையப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது.

கோயம்புத்தூரிலிருந்து 98 கி.மீ.

தங்கும் வசதி : *நகரின் மையப் பகுதியிலேயே கோயில் இருப்பதால் குடும்பத்தோடு வருபவர்கள் ஊட்டி நகரிலேயே தங்கி,கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.

கட்டணம் ரூ.300 முதல் ரூ.1000 வரை.

போக்குவரத்து வசதி : *ஊட்டி இந்தியாவின் மிகப் பெரிய சுற்றுலா தலமாதலால் ஊட்டிக்கு முக்கிய நகரங்களிலிருந்து போக்குவரத்து வசதி அதிகம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் ஊட்டி,கோவை.
*அருகிலுள்ள விமான நிலையம் கோவை.

அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில்,பாரியூர்


அம்மன் : காளியம்மன்
பிறபெயர் : கொண்டத்துக்காரி
கோலம் : ருத்ரகோலம்
சிறப்பு : குண்டமிறங்கல்
விசேசம் : வாக்குகேட்டல்
ஊர் : பாரியூர்
காவல்தெய்வம் : முனியப்பன்
புராணபெயர் : அழகாபுரி
பழையபெயர் : பராபுரி
மாவட்டம் : ஈரோடு

பிரார்த்தனை

இத்தலத்தின் கொண்டத்துக்காரியை வணங்குவோர்க்கு திருமணபாக்கியம் , குழந்தை வரம், விவசாய செழிப்பு ஆகியவற்றைத் தருவதோடு பில்லிசூன்யம்,செய்வினை ஏவல் பகை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த துன்பங்களிலிருந்து பாதுகாத்து அருள்பாலிக்கிறார்.

நேர்த்தி கடன்

*அக்னிகுண்டம் இறங்குதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அம்மனுக்கு விளக்கு போடுதல் ஆகியவை முக்கிய நேர்த்திகடன்களாக இருக்கின்றன

லட்சார்ச்சனை,1008 சங்காபிசேகம் , பச்சை மா அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம் ஆகியவற்றைச் செய்யலாம்.அம்மையை ஊஞ்சலில் அமரவைத்து பாடல்கள் இசைத்து ஊஞ்சல் ஆட்டலாம்.

இவை தவிர அம்மனுக்கு வழக்கமான அபிசேக ஆராதனைகள் நடத்தலாம்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம், வசதியுள்ளவர்கள் திருப்பணிக்கு நன்கொடை தரலாம்.

கோயிலின் சிறப்பம்சம்

*குண்டம் இறங்குதல் : *பக்தர்கள் மரக்கட்டைகளை கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 40 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள். முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள். காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மிகப்பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி ஆகும்.ஆண் பெண் சிறுவர் சிறுமியர் உடல் ஊனமுற்றவகள் மெத்தையில் நடந்து வருவது போல் தீ கங்கில் அம்மன் நினைத்து 40 அடி நீளமுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி வருவது ஆச்சர்யமாக இருக்கும்.குண்டமே அம்மனின் பெயரோடு சேர்ந்து கொண்டத்து(குண்டம்) காளியம்மன் என்று வழங்கப்படுகிறது.

*வாக்கு கேட்டல் : அம்மனின் வலது கையில் ராம் வாக்கு உள்ளது. இடது கையில் உத்தர வாக்கு உள்ளது.அம்பாளிடம் தங்கள் பிரச்சினைகளுக்கு உத்தரவு கேட்பவர்கள் வலது கை வாக்கு கிடைத்தால் காரியத்தை தொடர்கின்றனர், இடது கை வாக்கு கிடைத்தால் நிறுத்து விடுகின்றனர்.ஆனால் வியாதிகள் குணமாவதற்கு இடது கை உத்தரவே பெரிதும் வேண்டப்படுகிறது.

*முனியப்ப சுவாமி (குழந்தை பாக்கியம்) : இத்தலத்தில் பிரம்மாண்ட வடிவில் உள்ள முனியப்ப சுவாமி மிகவும் அருள் வாய்ந்தவர்.புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் அம்மனிடம் பூ வைத்து வாக்கு கேட்டுவிட்டு முனியப்ப சுவாமிக்கு செவ்வாய் அன்று 12 குடம் தண்ணீர் ஊற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

தவிர முனியப்ப சுவாமியை வழிபடுவோர் பேய் பிசாசுத் தொல்லைகளில் இருந்து விடுபடுவர்.இவரது திருவடிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட எந்திரங்கள், மஞ்சள் கயிறு போன்றவை தீராத நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தவை

தல பெருமைகள் :

*அம்மன் சிரசில் ருத்ரன் உள்ளார். முடி ஜூவாலா முடி (நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போல் இருக்கும்)தாங்கி ருத்ரகாளியாக அமைந்துள்ளார். ருத்ரனின் முகம் அம்மனின் சிரசில் அமைக்கப்பட்டுள்ளது.

*அம்மனின் வடக்கு பார்த்து இருக்கும் கோயில் இது.

*இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்மன் அருள்பெற்ற சித்தர் சூரராசச் சித்தர் என்பவர்.இவர் அம்மனின் அருள்பெற்றதோடு மந்திரசக்தி படைத்தவராக விளங்கினார். இவர் தம் மந்திரசக்தியின் திறனால் அன்னை காட்சி கொடுத்தாராம்.திருக்கோயிலின் கீழ்ப்புறத்தில் பட்டாரி என்னும் கோயில் இருக்கிறது.இதற்கருகில் இன்னும் சமாதி நிலையில் சித்தர் இருப்பதாக கருதப்படுகிறார்.

*1500 ஆண்டுகள் பழமையான கோயில் இது.

*அம்பாள் கீழ் உள்ள பீடம் 7 பீடமாக அமைந்துள்ளது.

*எழில் மிகுந்த சூழலில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

*அழகு சூழ்ந்த கோயில் என்பதால் அடிக்கடி சினிமா ஷூட்டிங் நடைபெறும். ஏராளமான தமிழ் சினிமாக்களில் இடம் பெற்ற கோயில் இது.

தல வரலாறு :

பாரியூரில் இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் கொண்டத்து காளியம்மன் கோயில் எப்பொழுது அமைக்கப்பட்டது என்பதற்கு சான்று ஏதும் கிடையாது. இக்கோயில் 1000 ஆயிரம் ஆண்டகளுக்கு மேலாக சரித்திரப்புகழ் பெற்ற கோயிலாக இருக்க வேண்டும் . பல நூற்றாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த கோயில் பின்பு அப்பகுதி முக்கியஸ்தர்களால் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் சூரராசச் சித்தர் என்பவர் மந்திர சக்தி படைத்தவராக இருந்துள்ளார்.மந்திரசக்தியினால் அவருக்கு அன்னை காட்சி தந்ததாக கூறப்படுகிறது. சுற்றிலும் பச்சைபசேல் என வயல் வெளிகள் சூழ மனதுக்கு அமைதி தரும் வகையிலான சுற்று சூழலோடு அமைந்திருக்கிறது. இக்கோயிலில் திரைப்பட படப்பிடிப்பு அடிக்கடி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய திருவிழாக்கள்

*மார்கழி தேர்த்திருவிழா (குண்டம் இறங்குதல்)5 நாள் திருவிழா 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர்.
*ஆடி வெள்ளி உற்சவம் 5 வெள்ளிக் கிழமைகளும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பக்தர்கள் கூடுவர்

தவிர தை வெள்ளிக்கிழமைகள், மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

விசேச நாட்களான நவராத்திரி, கார்த்திகை தீபம்,பொங்கல், தீபாவளி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடக்கும். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது கண்கொள்ளாக்காட்சி

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கோபிசெட்டிபாளையம் 3 கி.மீ.

தங்கும் வசதி :

* குடும்பத்தோடு வருபவர்கள் கோபி செட்டிப்பாளையத்தில் தங்கிக் கொண்டு, கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம். கோபி செட்டி பாளையத்தில் தனியார் லாட்ஜ்கள் உள்ளன.

கட்டணம் ரூ.150 முதல் ரூ.500 வரை.

போக்குவரத்து வசதி : *கோபிசெட்டிப்பாளையத்துக்கு மிக அருகில் பாரியூர் இருப்பதால் கோபியிலிருந்து பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உள்ளது.

*அருகிலுள்ள ரயில் நிலையம் ஈரோடு
*அருகிலுள்ள விமான நிலையம் கோவை

வியாழன், ஜூன் 8

அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் கரூர்

அம்மன் : ஸ்ரீ மாரியம்மன்
பிறபெயர் : மகாமாரி
பார்வை : ஈசாண்யம்
பிரசாதம் : திருமண்
படையல் : தயிர்சாதம்
திருவிழா : வைகாசிவிழா
சிறப்பு : பூச்சொரிதல்
ஊர் : கரூர்
புராணபெயர் : கருவூர்
மாவட்டம் : கரூர்

பிரார்த்தனை

*அம்மை முதலான நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலிவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வாமாக இம்மாரித் தாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை

நேர்த்தி கடன்

அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்தல், காவடி எடுத்தல், பால் குடம் , மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை. இவை தவிர நீர்மோர், பானக்கம், வடைபருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம்.பால் அபிசேகம் செய்யலாம்.திருவிளக்கு பூஜை நடத்தலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.

தயிர்ச்சாதம் படைத்தல் : இக்கோயிலில் விஷேச அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

தல பெருமைகள் :

*அம்மன் ஈசாண்யப் பார்வையுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்

*அளவில் சிறிய கோயிலாக இருந்தாலும் இங்குள்ள அம்மன் மிகுந்த சக்தி கொண்டவள் என்பது இங்கு வரும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கொண்டு அறியலாம்.

*100 வருடத்திற்கும் முந்தய பழமையான கோயில்.

*இந்துக்கள் தவிர முஸ்லிம்கள், கிருஸ்த்துவர்கள் என்று அனைத்து மத்தினரும் வந்து வழிபடும் ஆலயம்.

தல வரலாறு :

அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறாள். இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது. கிரமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இத்திருக்கோயிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல் உள்ள பெரியதொரு பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது.வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பாக நடக்கும்.


கோயிலின் சிறப்பம்சம்

*திருமண் தத்துவம் மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில். மறைவது பூமித் தாயின் வயிற்றில். எப்படித் தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் எனபதே இதில் அடங்கியுள்ள தத்துவம்.இதன் உண்மை வடிவமே மாரியம்மன்.அந்த வகையில் இந்த ஆலயத்தின் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.

*மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து மஞ்சள் சொருகப்பட்டு ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் கம்பம் நடப்படும்.இதை சுவாமியாகக் கருதுகிறார்கள்.இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.

*மதங்களைக்கடந்த அம்மன் விழாக்காலங்களில் போடப்படும் பிரம்மாண்டமான பந்தல் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஷேக் முகமது என்னும் இஸ்லாமியப் பெரியவரால் போடப்பட்டது.அப்பழக்கம் அவரது பரம்பரையால் தொடரப்பட்டு இன்றுவரை தொடர்கிறது.அதற்கான ஆவணமே உள்ளது.

முக்கிய திருவிழாக்கள்

*வைகாசிப் பெருந்திருவிழா 21 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாதான் இத்தலத்தின் மிகப்பெரும் திருவிழா. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.கரூர் நகரமே பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கும்.பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்த இத்திருவிழாவின்போது கூடுவது கரூர் நகரத்துக்கே பிரம்மாண்டத்தை தருவதாக இருக்கும்.

தவிர ஆடிவெள்ளி, நவராத்திரி, தீபாவளி பெரிய கார்த்திகை பொங்கல், தை வெள்ளி, பங்குனி மாதத்தில் நடக்கும் கும்பாபிசேக ஆண்டுவிழா, பங்குனி உத்திர திருவிழா நாட்களின் போதும் பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கரூர் நகரின் மத்தியில் உள்ளது.

போக்குவரத்து வசதி : *கரூர் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம்

*அருகிலுள்ள ரயில் நிலையம் கரூர்
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம்

அம்மன் : மாரியம்மன்
பிறபெயர் : கோட்டைமாரி
சிரசு : அக்னிஜூவாலை
கருவறை : மிகசிறியது
விசேசம் : பூப்போடுதல்
தலமரம் : அரச மரம்
தீர்த்தம் : திருமணிமுத்தாறு
கோபுரம் : 81 அடி
ஊர் : சேலம்
மாவட்டம் : சேலம்

பிரார்த்தனையும் நேர்த்திகடனும்

*மண் உரு சாத்துதல் :அம்மை நோய் கண்டவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கிச் சென்று நோய் குணமான பின்பு நேர்த்திக்கடனாக பொம்மை உருவங்களை தம் தலை மீது சுமந்து கொண்டு கோயிலை மூன்று முறை வலம் வர வேண்டும்.

*கண்ணடக்கம் சாத்துதல் :கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ அம்மனிடம் வேண்டிக்கொண்டால் குணமடையும். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்துவர்.

*உருவாரம் சாத்துதல் :நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பர்.

*அடியளந்து கொடுத்தல் : பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மூன்று முறை திருக்கோயிலை சுற்றி வருகின்றனர்.இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர்.

*உப்பு மிளகு போடுதல் : பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டவர்கள் குங்குமம் கலந்த உப்பை பலிபீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுவார்கள்.நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கறைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதீகம்.

*இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம்,குழந்தை பாக்கியம் கைகூடுகிறது

கோயிலின் சிறப்பம்சம்

*பூப்போட்டுப் பார்த்தல் :

இத்திருக்கோயிலில் பூப்போட்டு கேட்டல் பிரசித்த மானது. குடும்பத்தில் சிக்கல் தீர, திருமணம் நடைபெற, நோய் தீர, உத்தியோகம் கிடைக்க...இப்படி தங்கள் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க பக்தர்கள் வெள்ளை , சிவப்பு நிறங்களில் உள்ள பூக்களை தனித்தனி பொட்டலங்களில் கட்டி அம்மன் திருவடிகளில் வைத்து எடுப்பார்கள். தாம் நினைத்த நிறப் பூ வந்து விட்டால் தாம் எண்ணி வந்த செயல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை

தல பெருமைகள் :

*அம்மன் ஈசாணி மூலையை பார்த்தபடி உள்ளது

*தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோயில் இதுவாகத்தான் இருக்கும் .எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி கும்பிடவேண்டும் என்பதற்காக இவ்வாறு இருப்பதாக கூறப்படுகிறது.

*மற்ற அம்பாள் தலங்களில் மனித தலை இருப்பது போல் அல்லாமல் இந்த அம்மனின் காலடியில் தாமரை மொட்டு உள்ளது.

*நைவேத்தியம் படைக்கப்படுவதில்லை. மாறாக இத்தலத்தில் எடுத்து அம்பாளுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பம்சம்.

*சேலம் மாநகரின் மத்தியில் பெரிய கோபுரம் உள்ள இந்தக் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகிறார்கள்

முக்கிய திருவிழாக்கள்

*ஆடித்திருவிழா

இது இத்தலத்தின் மிகப்பெரிய விழா ஆகும்,இவ்விழாவின் போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச் சென்று பிற மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இது தொன்று தொட்டு வரும் நிகழ்ச்சி ஆகும்.இத்திருவிழா மொத்தம் 15 நாட்கள் நடைபெறும்.பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், சக்தி அழைப்பு, சக்தி கரகம், உருளுதண்டம், பொங்கலிடுதல், மகா அபிசேகம் ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்.இவ்விழாவின்போது 7லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்குவது பிரம்மாண்டமான காட்சி ஆகும்.அம்மன் அருள் பெறும் வகையில் அரசு ஆண்டு தோறும் ஆடிமாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமைக்கு மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கிறது.

இவை தவிர இத்திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு ஆகிய விசேச தினங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக அர்ச்சனைகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் செய்கின்றனர்.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சேலம் நகரின் மத்தியில் உள்ளது

கட்டணம் ரூ.200 முதல் ரூ.800 வரை.

போக்குவரத்து வசதி : *சேலம் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம்

*அருகிலுள்ள ரயில் நிலையம் சேலம்
*அருகிலுள்ள விமான நிலையம் கோவை

புதன், ஜூன் 7

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சமயபுரம்


அம்மன் : ஸ்ரீமாரியம்மன்
பிறபெயர் : மகமாயி
பிரபலம் : உலகளவில்
அபிசேகம் : பூச்சொரிதல்
தலமரம் : வேம்பு
காவல்தெய்வம் : கருப்பண்ணசாமி
ஊர் : சமயபுரம்
புராணபெயர் : கண்ணபுரம்
பிறபெயர் : கண்ணனூர்
மாவட்டம் : திருச்சி

பிரார்த்தனை

இத்தலத்து அம்மனிடம் என்ன வேண்டுதல் என்றாலும் அதை நிறைவேற்றி கொடுப்பதாக கூறுகிறார்கள்.சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முது மொழிக்கு ஏற்றபடி பக்தர்களின் வேண்டுதல்களை எங்கிருந்து வேண்டிக்கொண்டாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள்.
குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி அங்கு கோயில் ஊழியம் செய்து நேர்த்திகடனை நிறைவேற்றலாம்.

உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள், கண்பார்வை குறையுள்ளவர்கள் இத்தலத்தில் வணங்கி குணமாகின்றனர், வியாபார விருத்தி,விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

நேர்த்தி கடன்

மொட்டை அடித்தல், அர்ச்சனை, அபிஷேகம், காது குத்தல், தங்கரதம் இழுத்தல், அலகு குத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கரும்பு தொட்டில் பிரார்த்தனை, காணிக்கை, தைப் பூசம் 11 நாள் திருவிழா மாவிளக்கு எடுத்தல், நெல் காணிக்கை, ஆடு மாடு கோழி தானியங்கள் செலுத்தல்

இவை தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்.

கோயிலின் சிறப்பம்சம்

பூச்சொரிதல்

ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீ மாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.இந்த விரத நாட்கள் மொத்தம்28.இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது. இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு இளநீர்ல பானகம் போன்றவை மட்டுமே அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது.

தல பெருமைகள் :

*தமிழகத்திலேயே பக்தர்கள் வருகை அதிகமாகவும், அறநிலையத் துறைக்கு அதிகமான வருமானமும் பெற்றுத் தரும் சில கோயில்களில் இது முக்கியமான கோயில்.

*தாலி வரம் வேண்டி தாலி தங்கம் இங்கு மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது.

*இத்தலத்தில் வேண்டிகொண்டால் சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது.

*கர்நாடக பக்தர்கள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் என்பது சிறப்பம்சம்.(காரணம் இத்தலத்து மாரியம்மன் கர்நாடகத்து சாமுண்டீஸ்வரி சாயலில் இருப்பதால் )

*ஸ்ரீ ராமன் தகப்பனார் தசரத சக்ரவர்த்தி இத்தலத்தில் அம்மனை வழிபட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

தல வரலாறு :

சக்தி ஸ்தலங்களில் தலை சிறந்து விளங்கும் தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும். படிப்படியாக வளர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக மிக பிரமாண்டமான அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள வருகின்றனர்.சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற முதுமொழிக்கேற்ப பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் இங்கு வீற்றிருக்கும் அம்பாள்.பக்தர்கள் தாங்கள் எங்கிருந்தாலும் எந்த நாட்டிலிருந்தாலும் அங்கிருந்தபடியே சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனை வேண்டிக்கொண்டால் அவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி தருபவள் சமயபுரம் மாரியம்மனே.

நீண்ட நாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் இக்கோயில் வளாகத்திலேயே நோய் குணமாகும் வரை தங்கியிருந்து அம்மனின் அருளால் பூரண குணம் அடைந்து தங்கள் நேர்த்திகடனாக மாவிளக்கு வைத்து வழிபட்டு தங்களின் அன்பை அம்மனுக்கு தெரிவித்து பிரியாவிடை பெற்றச் செல்கின்றனர்

முக்கிய திருவிழாக்கள்

சித்திரைத்தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று சித்திரைத்த தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் மட்டும் 7 லட்சம் பக்தர்கள் திரள்வர்.

பூச்சொரிதல் மாசிக் கடைசி ஞாயிறு 3 லட்சம் பக்தர்கள் திரள்வர்.

பஞ்சப்பிரகாரம் வைகாசி 1 ந் தேதி 1 லட்சம் பக்தர்கள் திரள்வர்.

தைப் பூசம் 11 நாள் திருவிழா.

*தமிழ், ஆங்கில வருடபிறப்பு,விஜய தசமி , தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மன் தங்கரதத்தில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர்.

*தினந்தோறும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருப்பதோடு வாரத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும்.

பொது தகவல்கள்

தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண்: 0431 2670460
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருச்சிலிருந்து 15 கி.மீ.

போக்குவரத்து வசதி : *சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் சமயபுரம் இருப்பதால் பஸ் நிறைய வசதி உள்ளது.திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நகரப்பேருந்து வசதி நிறைய உண்டு.

*அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி.
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.

நவநீத கிருஷ்ணன் கோயில், மருதுõர்.


மூலவர் : நவநீத கிருஷ்ணர்
மாவட்டம் : திருநெல்வேலி
தீர்த்தம் : தாமிரபரணி
ஊர் : மருதுõர்

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரமளித்திடுவார் என்பது ஐதீகம்.

நேர்த்தி கடன்

குறிப்பாக வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து மருதுõர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார்.
கோயிலின் சிறப்பம்சம்

இங்கு மூலவர் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள் பாலிக்கிறார். எதிரில் நாலடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கருடாழ்வார், பக்தர்களின் குறைதீர்க்கும் கிருஷ்ணன் அழைக்கும் குரலுக்கு ஓடி வர தயாராக நிற்கிறார்.

தல பெருமைகள் :

கிருஷ்ணன் குழந்தையாக இருந்த போது, அவனது தாய் மருத மரத்தில் தான் உரலில் கட்டி போட்டார். கிருஷ்ணனோ அந்த உரலை இழுக்க மருத மரம் இரண்டு துண்டாகி, அதிலிருந்த தேவர்கள் முக்தியடைந்தார்கள். மருத மரங்கள் இப்பகுதியில் அதிகம் இருப்பதால் இந்த ஊர் மருதுõர் ஆனது.

மருதுõரில் கிருஷ்ணன் கோயிலைத்தவிர, ஆதி மருதீஸ்வரர் கோயில், வடக்கு வாசல் செல்வி கோயில், சாஸ்தா கோயில் ஆகியவை உள்ளன.

காலை 7 10 மணி வரை, மாலை 58 மணி வரையிலும் கிருஷ்ணரை தரிசனம் செய்யலாம்.

தல வரலாறு :

திருநெல்வேலி தாமிரபரணி நதி புனிதமான கங்கைக்கு நிகரானது. இந்நதியின் கரையிலுள்ளது மருதுõர் கிராமம். இவ்வூர் அணைக்கட்டின் அருகில் பல நுõறு ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டது நவநீத கிருஷ்ணன் கோயில்.

ஒரு முறை நாரதரிடம் எமன், ""பூலோகத்தில் ருக்மாங்கதன் என்பவனின் நாட்டில் எட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஏகாதசி விரதம் இருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் வைகுண்டத்திற்கு சென்று விடுகின்றனர். எனவே அந்த நாட்டில் எனக்கு வேலை இல்லாமல் போய் விட்டது,'' என வருத்தத்துடன் கூறினார். பிரம்மனும் அவர்களுடன் சேர்ந்து மோகினி என்ற பெண்ணைப்படைத்து ருக்மாங்கதன் என்ற மன்னனை மயக்கி அவனை விரதம் இருக்காமல் செய்து விட்டால் அவனும் அவனது மக்களும் எமலோகம் வருவார்கள் என்று திட்டம் தீட்டினார்கள். இதன் படி மோகினியும் ருக்மாங்கதன் நாட்டிற்கு வந்தாள். மன்னனோ அடிக்கடி வேட்டைக்கு வருபவன். அப்போது அந்த காட்டில் மோகினி வீணை இசைத்துக் கொண்டிருந்தாள். இசையில் மயங்கிய மன்னன் அவளை கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டான்.

இந்த நிலையில் ஏகாதசி திதி வந்தது. அன்று மன்னன் மது, மாமிசம் அனைத்தையும் தவிர்த்து விரதம் இருந்தான். இதைப்பார்த்த மோகினி, ""அரசே! விரதமும் உபவாசமும் மக்களுக்குத்தான். மன்னனுக்கல்ல. இந்த ஒரு முறை மட்டும் ஏகாதசி தினத்தில் என்னோடு சேர்ந்து உணவருந்தினால், அடுத்த ஏகாதசியிலிருந்து நாம் இருவரும் சேர்ந்து விரதம் இருப்போம்,'' என்றாள்.



மோகினியிடம், மன்னனின் மூத்த மனைவி, ""என் கணவரை ஏகாதசி விரதத்திலிருந்து பிறழச்செய்யாதே. அதற்கு பதில் என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன்,'' என்றாள்.

அதற்கு மோகினி, ""உன் உயிர் எனக்கு வேண்டாம், உன் மகனின் உயிரை கொடு. நான் மன்னரை ஏகாதசி விரதம் இருக்க அனுமதிக்கிறேன்,'' என்றாள்.

இதற்கு சந்திராவளி சம்மதித்தாள். அரசன் மிகுந்த வருத்தத்துடன் தன் மகனின் தலையை துண்டிக்க வாளை உருவினான். அப்போது மகாவிஷ்ணு அரசனின் முன் தோன்றி அவனை தடுத்தார்.

""ருக்மாங்கதா, ""உனது மன உறுதியை கண்டு மகிழ்ந்தேன். நீ இன்னும் சில காலம் வாழ்ந்து,பின் உன் மனைவியுடன் என்னிடமே வந்து சேர்,'' என்று ஆசீர்வதித்தார். மோகினி தான் வந்த காரியத்தை நிறைவேற்றாவிட்டாலும் நாராயணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் மறைந்தாள்.

இதை எமதர்மன் கேள்விப்பட்டான். ஏகாதசியின் மகிமையை அறிந்து, இந்த விரதம் இருப்பவர்கள் மரணம் அடைந்த பின் அவர்களை எமலோகத்திற்கு அழைத்து செல்வதை விட்டு விட்டான்.

முக்கிய திருவிழாக்கள்

கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி மற்றும் கிருஷ்ணருக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது.

பொது தகவல்கள்

மருதுõருக்கு திருநெல்வேலி ஜங்ஷன் மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து (பழைய பஸ் ஸ்டாண்ட்) 12, 12ஏ ஆகிய பஸ்கள் அடிக்கடி செல்கின்றன.

துõத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகள் உள்ளன. இவை அனைத்தும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதிகளே. ஏகாதசிக்கு நவதிருப்பதி தரிசனத்துக்காக செல்பவர்கள், மருதுõர் நவநீதகிருஷ்ணரையும் தரிசித்து வரலாம்.

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளார்


பிரதானம் : சனீஸ்வரர்
மூலவர் : நள்ளாறர்
பெருமை : சுயம்பு
அம்பாள் : பூண்முலையாள்
சிறப்பு : சப்தவிடதலம்
தலமரம் : தர்ப்பை
தீர்த்தம் : நளதீர்த்தம்
பதிகம் : தேவாரம்
ஊர் : திருநள்ளார்
மாநிலம் : பாண்டிச்சேரி

பிரார்த்தனை

*சனி தோசம் உள்ளவர்கள் நளதீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு நளன் கலி தீர்த்த விநாயகர் வழிபட்டு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு பின்னர் சனீஸ்வர பகவானை வழிபடுகிறார்கள்.

*ஜாதகத்தில் ஏற்படும் தோசங்கள் அதனால் வரும் துன்பங்கள் அனைத்தும் நவகிரக தேவனான திருநள்ளாற்று நாயக சனிபகவானை வழிபட்டால் தானாக விலகிப் போகும்.

*துயர்கள் நீங்கவும், பாவங்கள் தொலையவும், பல தரப்பட்ட பிணிகள் நீங்கவும் , எடுத்த காரியம் எளிதில் நிறைவேறவும், வாக்கு வன்மை பெறவும் இத்தலத்தில் பக்தர்கள் பெருமளவில் வழிபடுகின்றனர்.

*கல்யாணவரம் உள்ளிட்ட எந்த சுப காரியமானாலும் இத்தலத்து தர்ப்பாரண்யேசுவரரை(நள்ளாறர்) வணங்கினால் நன்மை கிடைக்கிறது.இத்தலத்துக்கு வந்து மனமுருகி வணங்கிவிட்டுச் சென்றால் மனநிம்மதி கிடைக்கிறது என்று இத்தலத்து பக்தர்கள் கூறுகிறார்கள்.

நேர்த்தி கடன்

*சனி தோசம் உள்ளவர்கள் அகல் விளக்கு வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபடுகிறார்கள்.எள் விளக்கு ஏற்றி சுவாமியை வழிபாடு செய்கிறார்கள்

*எள் சாதம், சகஸ்ரநாம அர்ச்சனை, அபிசேகம், நவகிரக சாந்த ஹோமம் ஆகியவற்றை செய்கிறார்கள்

*தவிர உண்டியல் காணிக்கை, பசுமாடு தானம் தருதல், முடி காணிக்கை ஆகியவற்றையும் செய்கிறார்கள்

*மூலவர் தர்ப்பாரண்யேசுவரருக்கு வஸ்திரம் சாத்துதல், பால் பன்னீர் இளநீர், தயிர், நல்லெண்ணெய், சந்தனம், விபூதி , அபிசேகப்பொடி ஆகியவற்றால் அபிசேகம் செய்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள்.மேலும் போக மார்த்த பூண்முலை அம்மனுக்கு புடவை சாத்துதல், விளக்கு வைத்தல், ஆகியவற்øயும் செய்கிறார்கள்.

*தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.

கோயிலின் சிறப்பம்சம்

*சனிபகவான் :

இத்திருத்தலம் சிவதலமாயினும் சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக விளங்குவதால் சனீஸ்வரத் தலமாகவும் விளங்குகின்றது. இவருடைய கோயில் கிழக்குப்பக்கத்தில் உட் கோபுரத்தின் வடபகுதியில் உள்ள சிறிய மாடத்தில் உள்ளது. இவர் நவகிரகங்களில் ஒருவர். இவரால் இத்தலத்திற்கு சனீசுவர ஷேத்திரம் என்னும் சிறப்புப் பெயர் உண்டு.இவரது சந்நிதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபடியே இருக்கும்.மகர, கும்ப ராசிகளுக்குச் சனி பகவான் அதிபதியாதலின் சந்நிதி முன்னால் மகர கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன. சனிபகவானுக்கு தங்கத்தால் ஆன காக வாகனம் உள்ளது.

*நள்ளாறர் (தர்ப்பாரண்யேசுவரர்) :

மூலவரான நள்ளாறருக்கு தர்ப்பாரண்யேசுவரர், நள்ளாற்றீசர் என்றும் பெயர் உண்டு.இம்மூர்த்தியின் திருச்சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவர் சுயம்புத் திருமேனியார். ஆதியில் தருப்பை வனத்தில் எழுந்தருளியிருந்ததால் தருப்பையிலான வடுக்கள் திருமேனியில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.இவர் மீது பாடப்பெற்ற திருப்பதிகமே பச்சைப் பதிகம்.

*தியாகப் பெருமான் :

இத்தலத்தில் உள்ள தியாகராசர் சப்தவிடத்தலங்களில் இரண்டாவது மூர்த்தி.இவரது திருப்பெயர் நகவிடங்கத்தியாகர். இவர் புரியும் திருநடனம் உன்மத்த நடனம். முசுகுந்தச் சக்கரவர்த்தி தேவேந்திரனிடமிருந்து பெற்று வந்த மூர்த்திகளுள் ஒன்று.இப்பெருமான் எழுந்தருளும் திருமேனியாக விளங்குகின்றார். இவருக்கு உரிய அம்பிகை நீலோத் பலாம்பிகை.

*சொர்ண கணபதி :

இத்தலத்தில் உள்ள சொர்ண கணபதியை வணங்கினால் செல்வச் செழிப்பு உண்டாகும்.இத்தலத்தை ஆரம்ப காலத்தில் கட்டும்போது போதிய நிதி வசதி இல்லாமல் இருந்ததாம்.இந்த சொர்ண கணபதிக்கு கணபதிஹோமம் செய்த பின்னரே நிதி நிறைய சேர்ந்ததாக தகவல் உண்டு.

தல பெருமைகள் :

*மூலவர் தர்ப்பையில் தோன்றிய சுயம்பு மூர்த்தி என்பது விசேசம்

*சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.மற்ற தலங்களில் மேற்கு பார்த்த முகமாக இருப்பார். இங்கு மட்டுமே கிழக்கு பார்த்த முகமாக உள்ளார்.

*இங்கு சனி பகவான் அனுகிரக மூர்த்தியாக உள்ளதால் இத்தலத்தில் அர்ச்சனை செய்த அனைத்து பிரசாதங்களையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

*நள மகாராஜவுக்கு சனி தோஷம் நீங்கிய தலம் இது.

*தியாகேசப் பெருமான் வெள்ளி விமானத்தில் வீற்றிருந்தருள்கின்றார்.

*மரகதவிடங்கர் பெட்டகத்தில் எழுந்தருளியுள்ளார்.சாதிப்பச்சை இரத்தினத்தினாலான சிவலிங்கத்திருமேனி இது.

*இத்திருக்கோயில் பலிபீடம் சற்று விலகியிருப்பது இத்தலத்தின் சிறப்பு.

*சனி பகவானுக்கு இத்தலத்தில்தான் ஈஸ்வர பட்டம் சிவபெருமானால் தரப்பட்டது.


*திருஞான சம்பந்தரால் பச்சைப் பதிகம் பெற்ற தலம் இது.

*வட நாட்டு பக்தர்கள் பெருமளவில் வந்து போகும் சிறப்பு வாய்ந்த கோயில் இது.

*வெளி நாடுகளிலிருந்து கொண்டே பெருமளவில் பக்தர்கள் இத்தலத்தில் அர்ச்சனை செய்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

தல விளக்கம்

நீடத நாட்டு மன்னன் நளன் மாவிந்த நகரைத் தலைநகராகக் கொண்டு பட்டமகிஷி தமயந்தியுடன் அரசாண்டு வந்தான். இறை வழிபாடு செய்கையில் ஒரு சமயம் நளன் சரியாகக் கால் அலம்பாது இருந்ததைக் கண்ட சனி பகவான் கலிரூபத்தில் பற்றிக் கொண்டான். ஏறத்தாழப் பன்னிரண்டு ஆண்டு காலம் காத்திருந்த சனிபகவானால் பீடிக்கப்பட்ட நளன் சூதாட்டத்தில் ஈடுபட்டு நாடு நகரங்களை இழந்தான். கட்டிய மனைவியுடன் கானகம் சென்றார். அங்கு இருவரும் எண்ணற்ற துன்பங்களைக் கண்டனர்.மனைவி படும் துன்பத்தை காண சகிக்காது நளன் தமயந்தியை வனத்திலே விட்டுவிட்டு வெளியேறினான்.பின்பு அயோத்தி அரண்மனையில் சமையற்காரனாக வேலை பார்த்தான்.அங்கு பற்பல துன்பங்களுக்கு பிறகு கணவனும் மனைவியும் இணைகின்றனர்..அங்கு நாரதமகரிஷி மூலம் தனக்கு சனிதோசம் இருப்பதை அறிந்து கொண்டான்.அந்த தோசம் நீங்க பல தலங்களை வழிபட செல்கையில் விருத்தாசலம் கோயிலில் ஸ்ரீமத் வாஜ முனிவரைக் கண்டபோது அவர் நளனை தர்ப்பாரண்யேசுவர ஷேத்திரத்திற்கு சென்று அங்குள்ள சனிபகவானை வணங்கி அவருக்கு பிரியமான பூஜைகளைச் செய்தால் நலமடைவாய் என்று கூறினார்.நளனும் அதற்கு உடன்பட்டு சனிபகவானை கண்டு அகமகிழ்ந்து அபிசேக ஆராதனைகள் செய்து வழிபட்டதால் அவனது வழிபாட்டில் உருகிய சனிபகவான் அவனை விட்டு விலகினார்.பின்னர் நளன் சிறிது காலம் இங்கு தங்கியிருந்து மாடக் கூடங்கள் அமைத்து திருக்குளம் வெட்டி திருக்கோயில் கட்டி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

முக்கிய திருவிழாக்கள்

*சனிப்பெயர்ச்சி விழா இத்தலத்தின் மிகப் பிரம்மாண்ட மான திருவிழா ஆகும். சனிப்பெயர்ச்சி என்பது சனிபகவான் ஓர் ராசியிலிருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் காலமாகும். இதனால் அவரவர் ஜாதகப்படி நன்மைகளும் தீமைகளும் விளையக்கூடும். ஆகையால் அச்சனிப்பெயர்ச்சி நாளில் இத்தலத்தில் சனிபகவானை அன்புடன் வழிபட்டால் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும்.எனவேதான்இங்கு சனிப்பெயர்ச்சி நாளன்று பக்தர்களின் கூட்டமும் பெருகி வருகின்றது.ஆயிரக்கணக்கான அர்ச்சனைகளும் அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

*இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நாளில் கொடிஏற்றி பதினெட்டு நாட்கள் பெருவிழா நடைபெறும்.இதுவே இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம். இப்பெருவிழாவின் இறுதிநாளில் இடையனுக்கு இறைவன் காட்சி கொடுத்த ஐதீகம் நடைபெறுகின்றது.

*புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் பலரும் இங்கு வந்து அன்னதானம் முதலியவற்றைச் செய்கின்றனர்.

*சுக்கிரவாரம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, மற்றும் புண்ணிய காலங்கள் ஆகியவற்றில் விழாக்களும் விசேச பூஜைகளும் நடைபெறுகின்றன.


*மாதத்தின் பிரதோச தினங்களில் கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவது சிறப்பு

*மேலும் வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான ஆங்கில தமிழ் புத்தாண்டு தினங்கள்,கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

பொது தகவல்கள்

*முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :

கும்பகோணம் 59 கி.மீ.
பாண்டிச்சேரி 140 கி.மீ
தஞ்சை 100 கி.மீ.
திருச்சி 150 கி.மீ.
காரைக்கால் 5 கி.மீ.

*போக்குவரத்து வசதி :

பஸ்வசதி : சென்னையிலிருந்து வருபவர்கள் பாண்டிச்சேரி , காரைக்கால் மார்க்கமாக திருநள்ளார் வந்து சேரலாம். தென்பகுதியிலிருந்து வருபவர்கள் கும்பகோணம் மார்க்கமாக திருநள்ளார் வந்து சேரலாம்.பாண்டிச்சேரி, கும்பகோணம் நகர்களிலிருந்து அடிக்கடி திருநள்ளாறுக்கு பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளது.

அருகில் உள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை
அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை