புதன், ஜூன் 7
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளார்
பிரதானம் : சனீஸ்வரர்
மூலவர் : நள்ளாறர்
பெருமை : சுயம்பு
அம்பாள் : பூண்முலையாள்
சிறப்பு : சப்தவிடதலம்
தலமரம் : தர்ப்பை
தீர்த்தம் : நளதீர்த்தம்
பதிகம் : தேவாரம்
ஊர் : திருநள்ளார்
மாநிலம் : பாண்டிச்சேரி
பிரார்த்தனை
*சனி தோசம் உள்ளவர்கள் நளதீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு நளன் கலி தீர்த்த விநாயகர் வழிபட்டு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு பின்னர் சனீஸ்வர பகவானை வழிபடுகிறார்கள்.
*ஜாதகத்தில் ஏற்படும் தோசங்கள் அதனால் வரும் துன்பங்கள் அனைத்தும் நவகிரக தேவனான திருநள்ளாற்று நாயக சனிபகவானை வழிபட்டால் தானாக விலகிப் போகும்.
*துயர்கள் நீங்கவும், பாவங்கள் தொலையவும், பல தரப்பட்ட பிணிகள் நீங்கவும் , எடுத்த காரியம் எளிதில் நிறைவேறவும், வாக்கு வன்மை பெறவும் இத்தலத்தில் பக்தர்கள் பெருமளவில் வழிபடுகின்றனர்.
*கல்யாணவரம் உள்ளிட்ட எந்த சுப காரியமானாலும் இத்தலத்து தர்ப்பாரண்யேசுவரரை(நள்ளாறர்) வணங்கினால் நன்மை கிடைக்கிறது.இத்தலத்துக்கு வந்து மனமுருகி வணங்கிவிட்டுச் சென்றால் மனநிம்மதி கிடைக்கிறது என்று இத்தலத்து பக்தர்கள் கூறுகிறார்கள்.
நேர்த்தி கடன்
*சனி தோசம் உள்ளவர்கள் அகல் விளக்கு வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபடுகிறார்கள்.எள் விளக்கு ஏற்றி சுவாமியை வழிபாடு செய்கிறார்கள்
*எள் சாதம், சகஸ்ரநாம அர்ச்சனை, அபிசேகம், நவகிரக சாந்த ஹோமம் ஆகியவற்றை செய்கிறார்கள்
*தவிர உண்டியல் காணிக்கை, பசுமாடு தானம் தருதல், முடி காணிக்கை ஆகியவற்றையும் செய்கிறார்கள்
*மூலவர் தர்ப்பாரண்யேசுவரருக்கு வஸ்திரம் சாத்துதல், பால் பன்னீர் இளநீர், தயிர், நல்லெண்ணெய், சந்தனம், விபூதி , அபிசேகப்பொடி ஆகியவற்றால் அபிசேகம் செய்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள்.மேலும் போக மார்த்த பூண்முலை அம்மனுக்கு புடவை சாத்துதல், விளக்கு வைத்தல், ஆகியவற்øயும் செய்கிறார்கள்.
*தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.
கோயிலின் சிறப்பம்சம்
*சனிபகவான் :
இத்திருத்தலம் சிவதலமாயினும் சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக விளங்குவதால் சனீஸ்வரத் தலமாகவும் விளங்குகின்றது. இவருடைய கோயில் கிழக்குப்பக்கத்தில் உட் கோபுரத்தின் வடபகுதியில் உள்ள சிறிய மாடத்தில் உள்ளது. இவர் நவகிரகங்களில் ஒருவர். இவரால் இத்தலத்திற்கு சனீசுவர ஷேத்திரம் என்னும் சிறப்புப் பெயர் உண்டு.இவரது சந்நிதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபடியே இருக்கும்.மகர, கும்ப ராசிகளுக்குச் சனி பகவான் அதிபதியாதலின் சந்நிதி முன்னால் மகர கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன. சனிபகவானுக்கு தங்கத்தால் ஆன காக வாகனம் உள்ளது.
*நள்ளாறர் (தர்ப்பாரண்யேசுவரர்) :
மூலவரான நள்ளாறருக்கு தர்ப்பாரண்யேசுவரர், நள்ளாற்றீசர் என்றும் பெயர் உண்டு.இம்மூர்த்தியின் திருச்சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவர் சுயம்புத் திருமேனியார். ஆதியில் தருப்பை வனத்தில் எழுந்தருளியிருந்ததால் தருப்பையிலான வடுக்கள் திருமேனியில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.இவர் மீது பாடப்பெற்ற திருப்பதிகமே பச்சைப் பதிகம்.
*தியாகப் பெருமான் :
இத்தலத்தில் உள்ள தியாகராசர் சப்தவிடத்தலங்களில் இரண்டாவது மூர்த்தி.இவரது திருப்பெயர் நகவிடங்கத்தியாகர். இவர் புரியும் திருநடனம் உன்மத்த நடனம். முசுகுந்தச் சக்கரவர்த்தி தேவேந்திரனிடமிருந்து பெற்று வந்த மூர்த்திகளுள் ஒன்று.இப்பெருமான் எழுந்தருளும் திருமேனியாக விளங்குகின்றார். இவருக்கு உரிய அம்பிகை நீலோத் பலாம்பிகை.
*சொர்ண கணபதி :
இத்தலத்தில் உள்ள சொர்ண கணபதியை வணங்கினால் செல்வச் செழிப்பு உண்டாகும்.இத்தலத்தை ஆரம்ப காலத்தில் கட்டும்போது போதிய நிதி வசதி இல்லாமல் இருந்ததாம்.இந்த சொர்ண கணபதிக்கு கணபதிஹோமம் செய்த பின்னரே நிதி நிறைய சேர்ந்ததாக தகவல் உண்டு.
தல பெருமைகள் :
*மூலவர் தர்ப்பையில் தோன்றிய சுயம்பு மூர்த்தி என்பது விசேசம்
*சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.மற்ற தலங்களில் மேற்கு பார்த்த முகமாக இருப்பார். இங்கு மட்டுமே கிழக்கு பார்த்த முகமாக உள்ளார்.
*இங்கு சனி பகவான் அனுகிரக மூர்த்தியாக உள்ளதால் இத்தலத்தில் அர்ச்சனை செய்த அனைத்து பிரசாதங்களையும் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
*நள மகாராஜவுக்கு சனி தோஷம் நீங்கிய தலம் இது.
*தியாகேசப் பெருமான் வெள்ளி விமானத்தில் வீற்றிருந்தருள்கின்றார்.
*மரகதவிடங்கர் பெட்டகத்தில் எழுந்தருளியுள்ளார்.சாதிப்பச்சை இரத்தினத்தினாலான சிவலிங்கத்திருமேனி இது.
*இத்திருக்கோயில் பலிபீடம் சற்று விலகியிருப்பது இத்தலத்தின் சிறப்பு.
*சனி பகவானுக்கு இத்தலத்தில்தான் ஈஸ்வர பட்டம் சிவபெருமானால் தரப்பட்டது.
*திருஞான சம்பந்தரால் பச்சைப் பதிகம் பெற்ற தலம் இது.
*வட நாட்டு பக்தர்கள் பெருமளவில் வந்து போகும் சிறப்பு வாய்ந்த கோயில் இது.
*வெளி நாடுகளிலிருந்து கொண்டே பெருமளவில் பக்தர்கள் இத்தலத்தில் அர்ச்சனை செய்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.
தல விளக்கம்
நீடத நாட்டு மன்னன் நளன் மாவிந்த நகரைத் தலைநகராகக் கொண்டு பட்டமகிஷி தமயந்தியுடன் அரசாண்டு வந்தான். இறை வழிபாடு செய்கையில் ஒரு சமயம் நளன் சரியாகக் கால் அலம்பாது இருந்ததைக் கண்ட சனி பகவான் கலிரூபத்தில் பற்றிக் கொண்டான். ஏறத்தாழப் பன்னிரண்டு ஆண்டு காலம் காத்திருந்த சனிபகவானால் பீடிக்கப்பட்ட நளன் சூதாட்டத்தில் ஈடுபட்டு நாடு நகரங்களை இழந்தான். கட்டிய மனைவியுடன் கானகம் சென்றார். அங்கு இருவரும் எண்ணற்ற துன்பங்களைக் கண்டனர்.மனைவி படும் துன்பத்தை காண சகிக்காது நளன் தமயந்தியை வனத்திலே விட்டுவிட்டு வெளியேறினான்.பின்பு அயோத்தி அரண்மனையில் சமையற்காரனாக வேலை பார்த்தான்.அங்கு பற்பல துன்பங்களுக்கு பிறகு கணவனும் மனைவியும் இணைகின்றனர்..அங்கு நாரதமகரிஷி மூலம் தனக்கு சனிதோசம் இருப்பதை அறிந்து கொண்டான்.அந்த தோசம் நீங்க பல தலங்களை வழிபட செல்கையில் விருத்தாசலம் கோயிலில் ஸ்ரீமத் வாஜ முனிவரைக் கண்டபோது அவர் நளனை தர்ப்பாரண்யேசுவர ஷேத்திரத்திற்கு சென்று அங்குள்ள சனிபகவானை வணங்கி அவருக்கு பிரியமான பூஜைகளைச் செய்தால் நலமடைவாய் என்று கூறினார்.நளனும் அதற்கு உடன்பட்டு சனிபகவானை கண்டு அகமகிழ்ந்து அபிசேக ஆராதனைகள் செய்து வழிபட்டதால் அவனது வழிபாட்டில் உருகிய சனிபகவான் அவனை விட்டு விலகினார்.பின்னர் நளன் சிறிது காலம் இங்கு தங்கியிருந்து மாடக் கூடங்கள் அமைத்து திருக்குளம் வெட்டி திருக்கோயில் கட்டி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
முக்கிய திருவிழாக்கள்
*சனிப்பெயர்ச்சி விழா இத்தலத்தின் மிகப் பிரம்மாண்ட மான திருவிழா ஆகும். சனிப்பெயர்ச்சி என்பது சனிபகவான் ஓர் ராசியிலிருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் காலமாகும். இதனால் அவரவர் ஜாதகப்படி நன்மைகளும் தீமைகளும் விளையக்கூடும். ஆகையால் அச்சனிப்பெயர்ச்சி நாளில் இத்தலத்தில் சனிபகவானை அன்புடன் வழிபட்டால் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும்.எனவேதான்இங்கு சனிப்பெயர்ச்சி நாளன்று பக்தர்களின் கூட்டமும் பெருகி வருகின்றது.ஆயிரக்கணக்கான அர்ச்சனைகளும் அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
*இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நாளில் கொடிஏற்றி பதினெட்டு நாட்கள் பெருவிழா நடைபெறும்.இதுவே இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம். இப்பெருவிழாவின் இறுதிநாளில் இடையனுக்கு இறைவன் காட்சி கொடுத்த ஐதீகம் நடைபெறுகின்றது.
*புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் பலரும் இங்கு வந்து அன்னதானம் முதலியவற்றைச் செய்கின்றனர்.
*சுக்கிரவாரம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, மற்றும் புண்ணிய காலங்கள் ஆகியவற்றில் விழாக்களும் விசேச பூஜைகளும் நடைபெறுகின்றன.
*மாதத்தின் பிரதோச தினங்களில் கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவது சிறப்பு
*மேலும் வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான ஆங்கில தமிழ் புத்தாண்டு தினங்கள்,கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.
பொது தகவல்கள்
*முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
கும்பகோணம் 59 கி.மீ.
பாண்டிச்சேரி 140 கி.மீ
தஞ்சை 100 கி.மீ.
திருச்சி 150 கி.மீ.
காரைக்கால் 5 கி.மீ.
*போக்குவரத்து வசதி :
பஸ்வசதி : சென்னையிலிருந்து வருபவர்கள் பாண்டிச்சேரி , காரைக்கால் மார்க்கமாக திருநள்ளார் வந்து சேரலாம். தென்பகுதியிலிருந்து வருபவர்கள் கும்பகோணம் மார்க்கமாக திருநள்ளார் வந்து சேரலாம்.பாண்டிச்சேரி, கும்பகோணம் நகர்களிலிருந்து அடிக்கடி திருநள்ளாறுக்கு பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளது.
அருகில் உள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை
அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக