வெள்ளி, ஜூன் 23

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர்

அம்மன் : மதுரகாளி
தோற்றம் : அருளும்நிலை
விசேசம் : மாவிளக்கு
தரிசன : திங்கள்
நாட்கள் : வெள்ளி
காவல்தெய்வம் : அய்யனார்
தலமரம் : மருதமரம்
தீர்த்தம் : திருக்குளம்
ஊர் : சிறுவாச்சூர்
மாவட்டம் : பெரம்பலூர்

பிரார்த்தனை

கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.

நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலிவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.

பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து தொழ விலகிச் சென்று விடுகின்றன.குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிடக் கரைந்து காணாமற்போய் விடுகின்றன.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வாமாக இம்மாரித் தாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நேர்த்தி கடன்

மாவிளக்கு ஏற்றுதல் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன் ஆகும்.வயிறு, நெற்றி, நெஞ்சு, கால், கை என்று நேர்ந்து கொண்டு அந்த பாகத்தில் மாவிளக்கு வைத்து அம்மனிடம் பிராத்தனை செய்கிறார்கள். சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே இந்த மாவிளக்கு நேர்த்திகடன் என்பதுதான் மிகவும் பிரபலம்.இவை தவிர இத்தலத்தில் அங்கபிரதட்ணம் செய்வதும் பக்தர்களால் செய்யப்படும் புகழ்பெற்ற நேர்த்திகடன் ஆகும்.இவை தவிர பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிசேகம் , அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்கிறார்கள்.

*அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

கோயிலின் சிறப்பம்சம்

*தரிசன நாட்கள் : வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது.காலை 8 மணிக்கு சந்நிதி திறக்கப்படும்.காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம். உபயதாரர் இருப்பின் மாலை 6 மணிக்கு சந்தனக் காப்பு நடைபெறும்.

*மாவிளக்கு : இத்தலத்தில் மிகப்புகழ்பெற்ற நேர்த்திகடன் என்பது இந்த மாவிளக்கு நேர்த்திகடன் என்பதாகும்.வெளியில் எங்கும் மாவிளக்கு மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள் அரிசி கொணர்ந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு மாவு தயார் செய்கிறார்கள்.பின்பு அதனுடன் நெய்விளக்கு அன்னை சந்நிதியில் ஏற்றித் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.இதற்காக மாவு இடிக்கத் தனியிடம் ஒதுக்கப்பட்டு உரல்களும்,உலக்கைகளும் ஆலயம் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளன.இடிக்க முடியாத பக்தர்களுக்கு கூலிக்கு மாவிடித்துத் தர பணியாளர்களும் உள்ளனர்.

தல பெருமைகள் :

*மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுர காளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.

*அம்மன் சுமார் 4 அடி உயரமாக இருக்கிறார்.
*வடக்கு நோக்கிய சந்நிதியில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
*அன்னை வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள்.

*நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள்.

*இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம்.

*திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை.அருளும் நிலையிலேயே காட்சி.

*1000 வருடங்களுக்கு முந்தைய கோயில்.

*குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்.

*மலைகளும் ஏரியும் குளமும் தோப்புகளும் வயல்களும் சூழ்ந்துள்ள மனதிற்கினிய சூழலில் ஊரின் எல்லையில் அன்னையின் திருக்கோயில் அமைந்துள்ளது.

*எழிலார்ந்த ராஜ கோபுரம் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறது.

*பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது.

*செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை வேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூஜையின் போது தீபாராதனை காட்டுகையில் முதலில் மலை நோக்கி மேலே தீபாராதனை காட்டி விட்டுத்தான் பிற்பாடு மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

*அன்னை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம், ஒரு முறை தரிசனம் செய்தவர் மீண்டும் மீண்டும் வந்து தரிசனம் செய்து மனநிறைவு பெற்றுச் செல்கின்றனர்.

*வெளி மாநிலங்கள் குறிப்பாக வட இந்தியாவிலிருந்து நிறைய பக்தர்கள் வருகிறார்கள்.பெரிய பெரிய வி.ஐ.பி.க்கள் வந்து வழிபடக் கூடிய கோயிலில் இது முக்கியமானது.

தல வரலாறு :

சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மனஅமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து அமைதி கொண்டாள் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. சிறுவாச்சூரின் வழிபடு தெய்வம் செல்லியம்மன் ஆகும்.ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான்.மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்கிறாள். செல்லியம்மனுடன் இரவு தங்க இடம் கேட்கிறாள்.செல்லியம்மனோ தன்னை மந்திர வலிமையால் தொல்லைப்படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனோ தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறித் தங்குகிறாள்.வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள்.

செல்லியம்மன் அன்னை திறம் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக்கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள்.சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள்.எனவேதான் திங்கள் வெள்ளி மட்டுமே ஆலயம் திறந்திருக்கும்.மற்ற நாட்களில் மதரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.

முக்கிய திருவிழாக்கள்

*சித்திரைத் திருவிழா : ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அம்மாவாசைக்குப் பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாய் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது.பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள்.இத்திருவிழாவில் மலை வழிபாடு, திருக்கல்யாணம், வெள்ளிக் குதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கிய திருவிழா நாட்களாகும்.இத்திருவிழா நாட்களில் ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும்.

*சிறப்பு வழிபாடு : மேலும் தமிழ் ஆங்கிலப்புத்தாண்டு நாட்கள் , ஆடி 18 ம் பெருக்கு புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், ஐப்பசியில் தீபாவளித் திருநாள்.கார்த்திகையில் தீபத்திருநாள்,, மார்கழி மாதப்பிறப்ப, வைகுண்ட ஏகாதேசி, தைப் பொங்கல், தைப்பூசம்,மாசியில் சிவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களிலும் ஆலயம் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருச்சியி 41 கி.மீ.

பெரம்பலூர் 8 கி.மீ.

தங்கும் வசதி : குடும்பத்தோடு வருபவர்கள் திருச்சி நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.திருச்சி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.

கட்டணம் ரூ.150 முதல் ரூ.800 வரை.

போக்குவரத்து வசதி : *திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் இருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் கோயில் இருகிறது.எனவே எளிதில் கோயிலை சென்றடையலாம்.திருச்சியிலிருந்து பெரம்பலூர் அல்லது சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நிற்கின்றன.

*அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக