வெள்ளி, ஜூன் 23

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் திருவேற்காடு

1.அம்மன் : தேவிகருமாரி
2.பெருமை : சுயம்பு
3.சிறப்பம்சம் : நாகபுற்று
4.விசேசம் : விளக்குபூஜை
5.தலமரம் : வெள்வேலம்
6.தீர்த்தம் : புஷ்கரணி
7.பதிகம் : தேவாரம்
8.ஊர் : திருவேற்காடு
9.புராணபெயர் : வேலங்காடு
10.மாவட்டம் : திருவள்ளூர்

பிரார்த்தனை

அன்னையின் அருள் இங்கு வரும் பக்தர்களுக்கு திருமணம் வரம், குழந்தை வரம் வியாபார விருத்தி சுபிட்சம் ஆகியவற்றைத் தருகிறது.

தீராத நோய்களைத் தீர்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்று செல்கின்றனர்.வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி சூன்யம் மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர்.ராகு கேது கிரகங்களால் தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன.

நேர்த்தி கடன்

திருவிளக்குபூஜை:

பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்படுகின்றது.இந்த பூஜையைச் செய்பவர்கள் அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன்களை அடைந்து வாழ்வில் உயர் நிலை பெறுகின்றனர்.

பால் ஊற்றுதல்:

புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு.ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு நிகழ்ச்சியாக செய்யப்படுகின்றது.

இவை தவிர முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிசேகம் மாலை சாத்துதல், சங்காபிசேகம், கலசாபிசேகம், கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல், அங்கபிரதட்சணம் , கண்ணடக்கம் ஆகியவை முக்கிய நேர்த்திகடன்களாக பக்தர்களால் இத்தலத்து அம்மனுக்கு செலுத்தப்படுகிறது.

கோயிலின் சிறப்பம்சம்

*பிரம்பு மந்திரிப்பு

கலிகாலத்தில் அநீதியும் அக்கிரமும் மலிந்து நல்லவர்களும் மதி மயங்கி தீயவர்களாக மாறி விடும் நிலை ஏற்பட்டது. அவர்கள் படும் இன்னல்களை நீக்க வேண்டும் என்று முனிவர்கள் நாராயணனைத் துதித்தார்கள். பின் சிவபெருமானையும் எழுந்தருளச் செய்துவிவாதித்தனர். முடிவாக எல்லோரும் திருவேற்காட்டுறை அரசியாம் கருமாரித்த தெய்வத்தை சரணடைதலே சரி என்று தீர்மானித்து திருவேற்காடு வந்து அன்னையை போற்றி நின்றனர். அன்னையும் அமைதியே வடிவான முகத்தில் கோபக்கனல் வீச திருஞானப் பிரம்பெடுத்து வேகத்துடன் சுழற்றி நல்லோர் வாழவும் தீயோர் அழியவும் சூளுரைத்தாள். இன்னும் தேவி உபாசகர் தம் பிரம்பால் மந்திரிக்கப் பெற்றவர்கள் உடல் நோய் மனநோய்களிலிருந்து விடுபட்டு அன்னையின் அருள் பெற்று நலத்துடன் வாழ்கின்றனர்.

தல பெருமைகள் :

*அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது விசேசம்

*மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது.

*தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போய்க்கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்

*மிக அதிகமான வருவாயை தமிழக அரசுக்கு ஈட்டித்தரும் கோயில்களில் இது முக்கியமானது.

*குறி சொல்லும் இடமாக இருந்து பின்பு படிப்படியாக 50 வருடத்திற்குள் மிகவும் புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் கோயில்.

*சுவாமி இராமதாசர் என்னும் மகான் தான் இத்தலத்தில் ஆரம்பத்தில் குறிசொல்லிக்கொண்டிருந்தார்.அவரால்தான் இக்கோயில் பிரபலடைந்தது என்கிறார்கள்.

*மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது.இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் கந்து வட்டி தீர்தல்,வியாதி வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்கின்றனர்.பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது.இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக கூறுகிறார்கள்

தல வரலாறு :

சிவபெருமான் தேவர்களின் துன்பம் நீங்கும் பெருõட்டு தேவலோகம் செல்ல வேண்டிவந்தது. அப்போது உமையாளிடம் நீயே சிவனும் சக்தியுமாகி ஐந்தொழிலையும் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இந்த திருநீற்றினால் அருள்புரிவாயாக என்று கூறிச் சென்றார். அம்மையும் அகத்தியரிடம் தாம் ஆட்சி செய்ய தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான் சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி(1. அந்தரக்கன்னி 2.ஆகாயக்கன்னி .3 பிõமணக்கன்னி 4. காமாட்சி 5.மீனாட்சி .6.விசாலாட்சி 7.கருமாரி ) செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள்.

இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள். பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர். சக்தியாகிய கருமாரிஇரண்டு உருவம் கொண்டாள். முதல் உருவம் பிரகாசத்துடன் இருந்தது.இரண்டாவது நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது.அதோடு மகாவிஷ்ணுக்கு காட்சி தந்தாள். இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார்.அப்போது அம்மன் அகத்தியரைப் பார்த்து முனிவா நான் உலக மக்கள் உய்வதற்காக பாம்பு உருவம் கொண்டு புற்றில் அமர்ந்து பலயுகாந்த காலங்கள் அருளாட்சி செய்வேன், கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன் என்று கருநாக வடிவம் எடுத்தாள்.இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது.

முக்கிய திருவிழாக்கள்

*ஆடிப் பெருந்திருவிழா

ஆனி கடைசி ஞாயிறு முதல் 12 வாரங்கள் தொடர்ந்து அன்னை கருமாரிக்கு ஆடிப் பெருந்திருவிழா சீருடனும் சிறப்புடனும் நடைபெறும்.செவ்வாய் வெள்ளி ஞாயிறு தினங்களில் 1008 பால் அபிசேகம் நவகலசம் சந்தனகாப்பு மஞ்சன காப்பு புற்றலங்கார 108 பால் குடம் படையல் போன்றவவையும் தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். ஞாயிறு காலை மற்றும் மாலைகளில் சொற்பொழிவு இன்னிசை பரதநாட்டிய கச்சேரிகள் நடைபெறும். ஒன்பதாம் ஞாயிறு காøல் தேர் உலா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

*தை மாதம் பிரம்மோற்சவம்

தை மாதத்தில் 19 நாட்கள் இத்திருவிழா நடக்கும். அம்மன் அழகிய அலங்காரத்துடன் வீதி உலா வரும் காட்சி காண்போரை பக்தி பரவசமடையச் செய்யும். தீர்த்த வாரி , தெப்ப உற்சவம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது.இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்

*மாசிமகம், நவராத்திரி திருவிழாவின் போதும் பக்தர்கள் வெள்ளமாக கோயில் காட்சி தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

*பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு

*தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்

பதிகம் பாடியோர் : திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் ஞானசம்பந்தர் வேற்காட்டு தலத்தைப் பற்றி பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்தது தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :

சென்னை யிலிருந்து 20 கி.மீ.
பூந்தமல்லி யிலிருந்து 8 கி.மீ

தங்கும் வசதி :

குடும்பத்தோடு வரும் பக்தர்கள் பூந்தமல்லியில்லியில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.

கட்டணம் : ரூ.200 முதல் 400 வரை

போக்குவரத்து வசதி :

பஸ்வசதி : சென்னை பூந்தமல்லி சாலையில் வேலப்பன் சாவடி அருகில் பிரிந்து செல்லும் ரோட்டில் திருவேற்காடு இருப்பதலால் சென்னையிலிருந்து எளிதில் பேருந்து மூலம் திருவேற்காடு சென்றடையலாம்.சென்னை தவிர தாம்பரம், திருவள்ளூர் , காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருவேற்காட்டிற்கு பஸ் வசதி நிறைய உண்டு.

அருகில் உள்ள ரயில் நிலையம் : ஆவடி,சென்னை.
அருகில் உள்ள விமான நிலையம் : சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக