திங்கள், ஜூன் 12
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இருக்கன்குடி
அம்மன் : மாரியம்மன்
பிறஅம்மன் : வாழவந்தம்மன்
பிறஅம்மன் : ராக்காச்சிஅம்மன்
பிறஅம்மன் : பேச்சியம்மன்
பிறஅம்மன் : முப்பிடாரியம்மன்
காவல்தெய்வம் : கருப்பசாமி
முக்கிய தீர்த்தம்: வைப்பாறு
பிறதீர்த்தம் : : அர்ச்சுனாநதி.
ஊர் : இருக்கன்குடி.
மாவட்டம் : விருதுநகர்
பிரார்த்தனை
குழந்தை வரம் கேட்டல், கல்யாண வரம் வேண்டுதல்,உடல்உறுப்புகள் குறைபாடுகள் தீர நேர்ந்து கொள்ளுதல், அம்மை நோய் குணமாக வேண்டிக்கொள்தல், பார்வை இல்லாத பாவத்தை நீக்கி பார்வை தர வேண்டிக்கொள்ளுதல் ஆகியவை இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனைகள் ஆகும்.இவை தவிர அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக கூறுகிறார்கள்
நேர்த்தி கடன்
அம்மனுக்கு அக்னி சட்டியும் ஆயிரங்கண்பானையும் எடுத்து அருளோடு வலம் வந்து வாயாற வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோயிலின் சிறப்பாகும்.இது தவிர இருக்கன்குடி தாய்க்கு நேர்த்திகடனாக கயிறு குத்துதல்,கெடா வெட்டுதல் ஆகியவையும் , உடல் குறைபாடுள்ளவர்கள் உருவபொம்மை செய்து வைத்து வழிபடுகிறார்கள், குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வைத்து தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
அம்மனுக்கு விளக்கு போடுதல்,அம்மனுக்கு புடவை சாத்துதல் , அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
கோயிலின் சிறப்பம்சம்
அம்மன் தோற்றம்:
பொதவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும்.ஆனால் இந்த அம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார்.இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியம்மனின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.
இருகங்கை குடி : அம்மன் தலம் அமைந்துள்ள இந்த ஊரின் தெற்கே பாயும் வைப்பாறு மற்றும் அர்ச்சுனா நதிகள் சூழ அன்னை குடிகொண்டுள்ள திருக்கோயில் அமைந்துள்ளது. இருகங்கைகள் கூடுவதால் இருக்கங்(ன்) குடி என்ற கூற்றில் இவ்வூர் போற்றப்படுகிறது.
அர்ச்சுனன் நதி :
அன்னையின் திருக்கோயிலுக்கு வடக்கே தவழும் அர்ச்சுனா நதி மேற்கே வத்திராயிருப்பு மலை எனப்படும் மகாலிங்க மலையிலே உற்பத்தியாகிறது. முன் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து கொண்டு இம்மலையடிவாரத்திற்கு வந்த போது நீராடுவதற்கு இடம் இல்லாமையால் அர்ச்சுனன் கங்கையை வணங்கி வருணக் கணையால் பூமியை பிளந்து அப்பிளவிலிருந்து தோன்றி பெருக்கெடுத்த ஆற்றில் பஞ்ச பாண்டவர்கள் திரௌபதியுடன் நீராடி மகிழ்நதார்கள் .அவ்வாறு தோன்றிய ஆறே அர்ச்சுனன் ஆறு என்று பெயர் பெறுவதாயிற்று.
இருக்கண்குடி யின் புராணப்பெயர்கள் : இருகங்கைகுடி, இருக்கங்குடி
தல பெருமைகள் :
*இத்தலத்தில் உள்ள வயன மண்டபத்தில் 20 நாட்கள் தங்கி 6 பூஜைகளுக்கும் போய் தீர்த்தம் எடுத்து தடவினால் கண்பார்வை கிடைக்கும்.
*அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தல விருட்ச்சத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
*மருத்துவர்களால் கை விடப்பட்ட அம்மை,தீராத வயிற்று வலி,கை கால் ஊனம் ஆகிய நோய்கள் குணமாகும் அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது.
*மருத்துவர்களால் கை விட்ட பின்புகூட இத்தலத்தில் வழிபடுவோர்க்கு கண்பார்வை கிடைக்கும் அதிசயம் நடக்கிறது.
*ஆறுகள் புடைசூழ நடுவே உள்ள ஆற்றுத் திட்டில் அமைந்துள்ள இத்திருக்கோயிலின் கிழமேல் அளவு 178 அடி , தென்வடல் அளவு 149 அடி
* அழகிய விமானத்துடன் கூடிய கர்ப்பகிரகத்தில் அருட்கலமாகிய மாரியம்மன் எழுந்தருளி இருக்கிறாள்.
*தென் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய புகழையுடைய இக்கோயில் இவ்வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம்
தல வரலாறு :
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இப்பக்கத்தில் சாணி பொருக்குவதற்காக வந்த ஒரு பூசாரிப்பெண் தற்போது அம்மன் இருக்கும் இடத்தில் வைத்த கூடையை எடுக்க முடியாது திண்டாடினாள்.கூட்டம் கூடியது.அப்போது அப்பெண் அருள் கொண்டு ஆடினாள். அவள் நான் மாரியம்மை எனது திருமேனி இங்கே மணலில் புதைந்து கிடைக்கின்றது.என்னை எடுத்து வழிபடுங்கள் என்று வாக்கருளினாள்.அதுபோலவே மணலை தோண்டி அம்மை திருவுருவச்சிலையை கண்டெடுத்து சேவல் கூவாதலும் கழச்சிச் செடி முளைக்காததுமாகிய அவ்விடத்திலேயே அன்னை கட்டளையிட்டபடி கோவிலிலே நிலை நிறுத்தி வழிபடுவராயினர்.அன்று முதல் இன்று வரை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுத்து வருகிறாள். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாதலால் வெள்ளி கிழமைகளில் கூட்டம் அலை மோதும்.
முக்கிய திருவிழாக்கள்
ஆடி வெள்ளி திருவிழா : ஆடி கடைசி வெள்ளிக்கு முன் வெள்ளி கொடிஏற்றம் செய்து அன்று உற்சவர் கோயிலில் இருந்து அன்னையின் உற்சவர் திருமேனி இடப வாகனத்தில் எழுந்தருளச் செய்து அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோயிலில் எழுந்தருளச்செய்யப்படுகிறாள்.
தை வெள்ளி திருவிழா , பங்குனி வெள்ளி திருவிழா.
தைகடைசி வெள்ளி, பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவது கண்கொள்ளாக்காட்சி ஆகும். விழாக் காலங்களில் அம்மன் அருள்பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் கூடும் மக்கள் வெள்ளம் வண்டிகளிலும் பிற வாகனங்களிலும் வந்து கூடி நேர்த்திகடன் செலுத்துவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.
மேற்கண்ட மாதங்களின் கடைசி வெள்ளி க்கிழமைகளில் 10 லட்சம் பக்தர்கள் திரள்வர் .
பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : விருதுநகரிலிருந்து 32 கி.மீ.
சாத்தூரிலிருந்து 8 கி.மீ.
அருப்புக்கோட்டையிலிருந்து 32 கி.மீ. திருநெல்வேலியிலிருந்து 82 கி.மீ.
மதுரையிலிருந்து 90 கி.மீ.
இவை தவிர குடும்பத்தோடு வரும் பக்தர்கள் சாத்தூர் அல்லது ,அருப்புக்கோட்டை உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்றுவரலாம்
கட்டணம் ரூ.100 முதல் ரூ.300 வரை.
போக்குவரத்து வசதி :
பஸ்வசதி : சாத்தூர்,அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஊர்களிலிருந்து நிறைய பஸ்கள் உள்ளன.
அருகில் உள்ள ரயில் நிலையங்கள் : சாத்தூர், அருப்புக்கோட்டை, மதுரை
அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GOOD INFORMATION
பதிலளிநீக்குmore info please check www.irukkangudi.com
பதிலளிநீக்குஇவ்வளவு விளக்கமாக கட்டுரை எழுதிவிட்டு, இந்தகோயிலின் மூலக்கிரக அம்மன் படத்தை ஏன் வெளியிடாமல் விட்டு விட்டீர்கள்?
பதிலளிநீக்குஅம்மன் தோற்றம்: பொதுவாக எங்கும் அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும்.ஆனால் இந்த அம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார்.இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியம்மனின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.அப்படிப்பட்ட அம்மனின் திருவுருவப் படத்தை வெளியிட்டு, மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கலாமே? ஏன் அம்மனின் படம் கிடைக்கவில்லையா?
பதிலளிநீக்கு